மோடி ராகுலை விஞ்சிய வெற்றி.. திண்டுக்கல்லை திணற வைத்த வேலுச்சாமி.. கல்தா கொடுத்த திமுக..!

Mar 13, 2024 - 13:41
மோடி ராகுலை விஞ்சிய வெற்றி.. திண்டுக்கல்லை திணற வைத்த வேலுச்சாமி.. கல்தா கொடுத்த திமுக..!

கடந்த நாடாளுமன்ற தேர்தல்ல தமிழ்நாட்டுலயே அதிக ஓட்டு வித்தியாசத்துல வெற்றி பெற்றவரான திண்டுக்கல்லின் சிட்டிங் எம்பியான வேலுச்சாமிக்கு இப்போது சீட் கொடுக்காமல் அந்த தொகுதியை கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது திமுக தலைமை..

2019 தேர்தலில் பிரதமர் மோடி.. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திய விட அதிகமா ஓட்டு வித்தியாசத்துல அதாவது  5,38,972 ஓட்டுகள் பெற்றவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தராமல் திமுக புறக்கணிக்க காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.. 

தற்போதைய சூழல்ல நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமா நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. தேசிய அளவிலான பெரிய கட்சிகள் தொடங்கி லெட்டர் பேடு கட்சிகள் வரை தற்போதைய தேர்தல்ல எப்படியாவது தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக மல்லுக்கட்டி வருகின்றன..

எப்படியாவது மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என பாஜகவும், இரண்டு முறை இழந்த ஆட்சியை எப்படியாவது மீட்டெடுத்து விட வேண்டும் என காங்கிரஸ் கட்சியும் போராடி வருகின்றன. ஒரு பக்கம் மாநில கட்சிகளோடு பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. மறுபுறம் திமுக, ஆம் ஆத்மி,  திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளோடு காங்கிரஸ் கைகோர்த்து தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க தமிழகத்தின் தேர்தல் களம் தான் தற்போது பரபரப்பை கூட்டி இருக்கிறது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு திட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று சொல்லலாம். மதிமுக, விசிக, கொமதேக  உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்பட்டு அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கும் அவர்கள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்த பட்டியல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் திமுக தனது வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் திமுகவுக்குள்ளான பூசல் தென் மாவட்டத்தில் இருந்து தொடங்கி இருக்கிறது. திண்டுக்கல்லில் சிட்டிங் எம்பியாக இருக்கும் வேலுச்சாமியை தவிர்த்துவிட்டு அந்த தொகுதியை  கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது திமுக. திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு திமுக வெற்றி பெற்றதில்லை. கடைசியாக 1980 -ல் ராஜாங்கம் திண்டுக்கல் தொகுதி எம்பி ஆக இருந்தார். 

அவரது மறைவுக்கு பிறகு நடந்த இடைத்தேர்தல் தேர்தல்களில் அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தான் கட்சிகளை வெற்றி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் சுமார் 39 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக தனது வேட்பாளரை நேரடியாக களம் இறக்கியது. கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற பொறுப்பை தவிர வேறு எந்த பதவியும் இல்லாத மக்களிடத்தில் அறிமுகமும் இல்லாத ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். ஒட்டன்சத்திரத்தில் பெரும் செல்வந்தராகவும் பெங்களூருவில் பைனான்ஸ், பிஸ்கட் கம்பெனி என தொழில் செய்து வந்த வேலுச்சாமி, அரசியல் ஆசையில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பப்பட்டார். 

தற்போதைய அமைச்சராக இருக்கும் சக்கரபாணியின் அறிமுகத்தோடு ஐ.பெரியசாமியின் ஆசி பெற்ற அவர் திமுக தலைமைக்கிட்ட போய் வாய்ப்பை பெற்று திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார். அதே நேரத்தில் அதுவரை திண்டுக்கல்லில் தனது வேட்பாளரை நேரடியாக நிறுத்திய அதிமுக அந்த முறை பாமகவுக்கு ஒதுக்கியது. பாமக சார்பில் போட்டியிட்ட ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஜோதிமுத்து திமுக வேட்பாளரான வேலுச்சாமி இடம் படுதோல்வியை சந்தித்தார்.

வேலுச்சாமி 7,46,523 ஓட்டுகளை பெற்றார். அவர் எதிர்த்து போட்டியிட்ட பாமகவின் ஜோதி முத்து சுமார் 2.50 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்ற நலையில் 5,38,972 ஓட்டுக்களை கூடுதலாக பெற்று பெருவெற்றி பெற்றார் வேலுச்சாமி. இது அந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியிலும், கேரளாவின் வயநாட்டில் ராகுல் காந்தி பெற்ற ஓட்டுக்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்தி சுமார் 4.31 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும், பிரதமர் மோடி 4.70 லட்சம் வாக்கு வித்தியாசத்திலுமே பெற்றே வெற்றி பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையும் வேலுச்சாமி பெற்றார். இதன் மூலம் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு திண்டுக்கல் தொகுதி திமுக வசமானது. அதிக வாக்குகள் பெற்ற எம்பி உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை வேலுச்சாமி படைத்திருந்தார். ஆனால் அதற்குப் பிறகு தொழில் விஷயமாக பெங்களூரு மற்றும் டெல்லியிலேயே முகாமிட்ட அவர் தனது தொகுதி பக்கமே எட்டிப் பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. மேலும் கட்சி நிகழ்ச்சிகளிலும் அவ்வளவாக கலந்து கொள்வதில்லை நிர்வாகிகளை மதிப்பதில்லை பொதுமக்களிடம் அறிமுகம் இல்லை வாக்காளர்கள் அவர் முகத்தையே மறந்து விட்டனர் என்ற குற்றச்சாட்டு ஐந்து ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டது.

இதுதான் திண்டுக்கல்லில் மீண்டும் வேலுச்சாமி போட்டியிட வைத்தால் அது திமுகவுக்கு பலத்த பின்னடைவு சந்திக்கும் என்பதாலேயே அவர் புறக்கணிக்கப்பட காரணம்.  அதே நேரம் அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசனும், நத்தம் விஸ்வநாதனும் தங்கள் வாரிசுகளை களம் இறக்க தயாராக இருக்கும் நிலையில் திமுக தோல்வியை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதால் அந்த தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாசம் ஒப்படைத்து விட்டதாக சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் தற்போது அமைச்சர்களாக இருக்கும் ஐ.பெரியசாமி சக்கரபாணி ஆகியோர் மாவட்டம் முழுவதும் தீவிரமாக வேலை செய்து வந்தனர். தொகுதிகளில் சின்னம் வரைவது கூட்டங்களை நடத்துவது என தீவிரமாக செயல்பட்டு வந்தவர்கள் தற்போது தலைமையின் அறிவிப்பால் சற்றே அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 17 பேர் விருப்ப மனு தாக்கல் செய்த நிலையில் அவர்களில் மூன்று பேரை தலைமைக்கு பரிந்துரை செய்திருந்ததாகவும் தற்போது அவர்களை புறக்கணித்துவிட்டு கூட்டணி கட்சிக்கு கொடுத்திருப்பது திமுகவினையை அதிருப்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அதே நேரத்தில் கம்யூனிஸ்டு கட்சி கடந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது. தற்போது நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளரை எளிதில் விழ்த்தி விடலாம் அரசியல் பலமும் பண பலமும் இருந்தால் வெற்றி பெற்று விடலாம் என்று ஆர்வத்தில் அதிமுகவினர் உற்சாகமாக களமிறங்கி பணியாற்றி வருகின்றனர். சுருக்கமா சொல்லனும்னா திண்டுக்கல் திமுகவினர் அதிருப்தியிலும், அதிமுகவினர் ஆர்வமாகவும் தேர்தலை சந்திக்கவுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow