செந்தில்பாலாஜி கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம்...  ED விசாரணைக்கு தடைவிதிக்க மறுப்பு..! 

எந்த நிவாரணமும் வழங்க முடியாது - தடை விதிக்கவும் முடியாது எனக்கூறி செந்தில்பாலாஜி மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றம்

Mar 13, 2024 - 13:43
செந்தில்பாலாஜி கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம்...  ED விசாரணைக்கு தடைவிதிக்க மறுப்பு..! 

முன்னாள் திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கில்,  அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தும், எந்த நிவாரணமும் தற்போதைக்கு வழங்க முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, அந்த துறையில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக லஞ்சம் பெற்றார் என புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை கையில் எடுத்த அமலாக்கத்துறை, கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில்பாலாஜியை கைது செய்து விசாரித்து வருகிறது. இவர் மீதான மோசடி வழக்கு சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி, முன்பு விசாரணையில் உள்ளது. 

இந்நிலையில், தன் மீதுள்ள மோசடி வழக்கு விசாரணை முடியும் வரை, தற்போது அமலாக்கத்துறை நடத்தி வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அதனை நீதிபதி அல்லி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட செந்தில்பாலாஜி தரப்பு, தன் மீது சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணை முடியும் வரை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளுக்கு தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள்,  அமலாக்கத்துறை விசாரணை ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது என தெரிவித்தனர். இதனால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது - தடை விதிக்கவும் முடியாது எனக்கூறி அவரது மனுவுக்கு மறுப்பு தெரிவித்து நிராகரித்தனர். அத்துடன் இந்த மனுவுக்கு பதில் மனு அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு ஏப்ரல் 15ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow