ஸ்டேடியத்துக்கு என்ன மூடி?: முதல்வர் அனுமதி வழங்கியும் மூடியே வைக்கும் அதிகாரிகள்

ஸ்டேடியத்தை தினமும் பல நூறு பேர் பயன்படுத்துவதால் சிந்தடிக் டிராக் டேமேஜ் ஆகிடும்

Nov 15, 2023 - 13:50
ஸ்டேடியத்துக்கு என்ன மூடி?: முதல்வர் அனுமதி வழங்கியும் மூடியே வைக்கும் அதிகாரிகள்

ஸ்டேடியம் இல்லாத சிட்டியில் வாழ வேண்டாம்! என்பது யங் இந்தியாவின் சபதமாக உள்ளது. அந்தளவுக்கு விளையாட்டில் ஆர்வமுடைய, மாநில! தேசிய! சர்வதேச! அளவில் சாதனை படைக்கும் வெறியுடைய பிள்ளைகள் பெருகி நிற்கிறார்கள் நம் தேசத்திலும் குறிப்பாக நம் தமிழகத்திலும். 

தமிழகத்தில் முதலமைச்சரின் மகனான உதயநிதியே, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக  இருப்பதால் இந்த துறை மிக சீரும் சிறப்புமாக, ஜெட் வேகத்தில் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில் சில விஷயங்கள் நடக்கின்றன தான். ஆனால் அதையும் தண்டி பல பஞ்சாயத்துகள் நடந்து கொண்டுதான் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் கோவை நேரு ஸ்டேடியம் அடிக்கடி மூடப்படும் விவகாரம். 

ஒட்டுமொத்த கோவை மாவட்டத்தின் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமல்லாது நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ஒன்பது கொங்கு மண்டல மாவட்ட விளையாட்டு வீரர்களுக்குமான மிகப்பெரிய ஆடுகளம்தான் கோவை காந்திபுரம் அருகிலிருக்கும் நேரு ஸ்டேடியம். தேசிய மற்றும் சர்வதேச பதக்கங்களை வெல்லும் கனவில் இருக்கும் தினசரி பயிற்சிக்களம்தான் இது. 

ஆனால் பல்வேறு காரணங்களை சொல்லி இந்த நேரு ஸ்டேடியம் அடிக்கடி மூடப்படுவதாகவும், அதிக நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகவும் விளையாட்டு துறையினர் குமுற துவங்கியுள்ளனர்.  கடந்த 7ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தேசிய ஜூனியர் தடகளப்போட்டிகள் நடப்பதால் ரெகுலர் பயிற்சியாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. அதன் பின் மூன்று நாட்கள் தீபாவளிக்காக விடுமுறை அறிவித்தனர். 

ஸ்டேடியம் திறக்கப்பட வேண்டிய 14ம் தேதி அங்கே சென்ற வீரர்களுக்கு அதிர்ச்சி. காரணம் அது பூட்டிக் கிடந்ததுதான். செக்யூரிட்டிகளும் அதை திறந்துவிட மறுக்க, கடும் வாக்குவாதத்துக்கு பின் திறந்துவிட்டனர். இந்நிலையில் ‘இந்த ஸ்டேடியத்தை புதுப்பித்தல் பணி எனும் பெயரில் ஏற்கனவே  கிட்டத்தட்ட  ஒரு வருடமாக மூடி வைத்திருந்தனர். சமீபத்தில்தான் முதல்வர் வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் திறந்து வைத்தார். அதன் பிறகாவது தடையின்றி திறந்து, பயிற்சிக்கு அனுமதி வழங்கி, விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பார்கள் என்று நினைத்தால் மீண்டும் மீண்டும் மூடி வைக்கிறார்கள்.

என்னதான் விளையாட்டுப் போட்டிகள் நடந்தாலும் காலை 8 மணி வரை ரெகுலர் வீரர்களை பயிற்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கோவை பிரிவு மட்டும் தனி விதிகளோடு இயங்குவது போல் இப்படி அனுமதிக்க மறுக்கிறது. 

இந்த ஸ்டேடியத்தில் புதிதாக சிந்தடிக் டிராக் அமைத்துள்ளார்கள். அதில் பயிற்சி மேற்கொள்ள விளையாட்டு வீரர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் இப்படி மூடி வைப்பதை என்னவென்று சொல்வது’ என்று ஆதங்கப்படுகிறார்கள் பயிற்சியாளர்கள். 

கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணாவோ ‘நான்கு நாட்களாக கால்பந்து போட்டி நடக்குது. இதனால் ஹாஸ்டல் மற்றும் தேசிய போட்டிக்கு பயிற்சி எடுக்கும் வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஸ்டேடியத்தை தினமும் பல நூறு பேர் பயன்படுத்துவதால் சிந்தடிக் டிராக் டேமேஜ் ஆகிடும். அதனால் கட்டண முறையில் வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள்’ என்று பத்திரிக்கையிடம் சொல்லியுள்ளார். 

-ஷக்தி 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow