அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை-ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு நாளை விசாரணை
அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வதுக்கு இடைக்கால தடை விதிப்பு
அதிமுக கட்சி மற்றும் கொடியை பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நாளை (நவ.16) விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த
தீர்மானத்திற்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. தொடர்ந்து, அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் அதற்கு தடை விதிக்கக்கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வதுக்கு நவம்பர் 06ம் தேதி இடைக்கால தடை விதித்த நீதிபதி வழக்கை நவம்பர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நவ 08ம் தேதி ஓ.பி.எஸ் சார்பில் முறையிடப்பட்டது.
இதையடுத்து மனு தாக்கல் நடைமுறைக்கு பின் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்த நிலையில், மனு தாக்கல் நடைமுறைகள் முடிந்தும் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் இன்று (நவ.15) விசாரணைக்கு வந்தது.அப்போது, வழக்கு நாளை (நவ.16) விசாரிக்கப்படும் என அறிவித்து வழக்கை தள்ளிவைத்தனர்.
What's Your Reaction?