FEDEX கூரியர் மோசடி வழக்கு: மலேசியாவில் பதுங்கி இருந்த பெண் கைது
சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது சுங்கத்துறை அதிகாரிகளிடம் வசமாக சிக்கினார்.
FEDEX கூரியர் மோசடி வழக்கில் மலேசியாவில் பதுங்கி இருந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வடபழனி குமரன் காலனியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். பிரபல காலை நாளிதழில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 20 ஆம் தேதி இவருக்கு போன் வந்தது. அதில் பேசியவர், தான் மும்பையில் இருந்து fedex கூரியரில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். மேலும், உங்கள் பெயரில் மும்பையில் இருந்து தைவானுக்கு அனுப்பிய கூரியரை மும்பை சுங்கத் துறையினர் கைப்பற்றி உள்ளதாகவும், அதில் போதைப் பொருட்கள் பாஸ்போர்ட் மற்றும் கிரெடிட் கார்டு, மற்றும் துணிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக மும்பை காவல்துறையினர் தங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று கூறி ஸ்ரீராமை பயமுறுத்தி உள்ளார். மேலும் நீதிமன்றத்தில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் எந்த நேரமும் கைது செய்யப்படலாம். இந்த வழக்குக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என மிரட்டியுள்ளார். மேலும், உடனடியாக ஜாமீன் பெற வேண்டும் என்றால் ஸ்கைப் வீடியோ காலில் வரவேண்டும் எனவும் மோசடி ஆமாமி கூறியுள்ளார்.
பயந்து போன ஸ்ரீராம் வங்கி விவரங்களை தெரிவித்துள்ளார். மோசடி நபரின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பும் படி மிரட்டி உள்ளார். இதையடுத்து ரூ.1,41,800 அனுப்பி உள்ளார். இந்த நிலையில் மேலும் பணம் கேட்டு மோசடி நபரர் மிரட்டியதால் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மோசடியில் தொடர்புடைய வேப்பேரியைச் சேர்ந்த பிரவீன் குமாரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். ஆனால் முக்கிய குற்றவாளி மலேசியா நாட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவர் சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பது தெரிய வந்தது.
இதையடுத்து இவருக்கு எதிராக வடபழனி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்தனர். அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தான் நந்தினி மலேசியாவில் இருந்து நேற்று மலேசியன் விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரை பிடித்தனர்.
பிறகு வடபழனி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் நந்தினியை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?