மத ரீதியான இடஒதுக்கீடா? மோடி இருக்கும் வரை நடக்காது... பிரதமர் சூளுரை
நாடு முழுவதும் மத ரீதியான இடஒதுக்கீட்டை காங்கிரஸ் உருவாக்க நினைக்கிறது. ஆனால் அது நடக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை ஒட்டி, மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கர்நாடகாவில் அட்டவணைப் பிரிவினரின் உரிமைகளைப் பறித்த காங்கிரஸ், அதை இஸ்லாமியர்களுக்கு வழங்கி, மத ரீதியிலான இடஒதுக்கீட்டை உருவாக்க நினைக்கிறது என்று குற்றம்சாட்டினார். அட்டவணைப் பிரிவினருக்கு பாஜக அரசு உலகளாவிய அங்கீகாரம் கொடுத்தது என்று கூறிய பிரதமர் மோடி, கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் இந்த செயல்பாடு, அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்திற்கே எதிரானது என்று சாடினார்.
மக்களின் ஆதரவு இருக்கும் வரை, மோடி ஆகிய நான் இருக்கும் வரை காங்கிரஸின் இந்த எண்ணம் நிறைவேறாது என்று ஆவேசமடைந்த பிரதமர் மோடி, சேவகனாகிய என் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே எனது மிகப்பெரிய பொறுப்பு என்றும், அதை ஒருபோதும் நழுவ விடமாட்டேன் என்றும் பேசினார். மேற்கொண்டு பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில்தான் நாள்தோறும் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன என்று கூறினார். காசி, அயோத்யா போன்ற புனித நகரங்களை பயங்கரவாதிகள் அழிக்க நினைத்தது காங்கிரஸின் ஆட்சியில்தான் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
பயங்கரவாதிகள் எங்கே இருந்தாலும் மோடி, அவர்களது இடத்திற்கே நுழைந்து அவர்களை அழிப்பேன் என்று சூளுரைத்த பிரதமர் மோடி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பை பாஜக தடை செய்து, அதன் முக்கிய தலைவர்களை சிறைக்கு அனுப்பியுள்ளதால்தான் இப்போது நாட்டில் பயங்கரவாத தாக்குதல் குறைந்துள்ளது என்றும் கூறினார். ஆனால், இப்போது கேரளாவில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களிடமே காங்கிரஸ் மீண்டும் உதவி கோருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இவர்களால் நாட்டுக்கு பாதுகாப்பை எப்படித் தர முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
What's Your Reaction?