“கடன் கேட்டா குடுக்க மாட்டியா”.. டாஸ்மாக் ஊழியர் மீது அட்டாக்.. கொத்தாக தூக்கிய போலீஸ்
திருவாரூர் அருகே, கடனுக்கு மதுபானம் தர மறுத்த டாஸ்மாக் ஊழியர் மீது, மதுப்பிரியர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதால் ஏற்கனவே விரக்தியில் இருந்த சக மதுப்பிரியர்கள், இந்த தாக்குதலுக்கு வரவேற்பு தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மாவூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில், அலெக்சாண்டர் என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஞாயிறு மதியம் 2 மணி அளவில், சுதாகர் என்பவர் டாஸ்மாக் கடைக்கு வந்து, கடனுக்கு மதுபானம் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், அலெக்சாண்டர் தர மறுத்துள்ளார். இதனால், எனக்கா சரக்கு தர மாட்ற என ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற சுதாகர், திடீரென அலெக்சாண்டர் மீது பாய்ந்து தாக்கியுள்ளார். மேலும், அவரது செல்போனையும் பிடிங்கி உடைத்ததாக தெரிகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வடபாதிமங்கலம் போலீசார், டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் சம்பவம் கறித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு தெனாவட்டாக வந்த சுதாகர், ஊழியர்களுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, போலீசார் இருக்கும்போதே ஊழியர்கள் மீது சுதாகர் தாக்குதல் நடத்தியுள்ளார். இதையடுத்து, போலீசார் அவரை கொத்தாக பிடித்து விலங்கு மாட்டி விசாரித்து வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் தீயாக பரவிய நிலையில், “மதுபானத்தை கூடுதல் விலைக்கு விற்றால் அடிக்கத்தான் செய்வார்கள்” என மற்ற மதுப் பிரியர்கள் தெரிவித்தது, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதேபோல, மன்னார்குடியிலும் ஞாயிறன்ற கடனுக்கு மதுபானம் தர மறுத்த டாஸ்மாக் ஊழியரின் மண்டையை சிலர் உடைத்துள்ளனர். அவர்களையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கும்போது, கடனுக்கு மது தாராததால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை திகைக்க வைத்துள்ளது.
What's Your Reaction?