சர சர வென சரிந்த மண்.. புதைந்த தொழிலாளி.. வெலவெலத்து போன வெலிங்டன்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கட்டுமான பணியின் போது மண் சரிவில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவம் மையம் சார்பில் புதிய குடியிருப்புகள் கட்டுமான பணி நடைப்பெற்று வருகிறது. கோயம்புத்தூரை சேர்ந்த நபர் கட்டுமானப்பணிக்கான ஒப்பந்தம் எடுத்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தொழிலாளர்கள் பணி செய்து கொண்டிருந்த பொழுது திடீரென மண் சரிந்து விழுந்தது.
இதில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் 31 வயதான சக்தி என்பவர் கால் தடுமாறி விழுந்ததில் பக்கவாட்டில் இருந்த மண் சரிந்து அவர் மீது விழுந்தது. இதனையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மண்ணில் புதையுண்டார்.
இதனால் பதறி போன சக தொழிலாளிகள் செய்வது அறியாமல் திகைத்தனர். உடனடியாக மண்ணில் புதைந்த சக்தியை அரை மணி நேரம் போராடி ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்டனர்.
மீட்கப்பட்ட சக்தியை ஆம்புலன்ஸ் மூலம் வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர் வட்டாட்சியர் கனி சுந்தரம் மற்ற தொழிலாளரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.
மண் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து வெலிங்டன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிட பணியின் போது தொழிலாளி உயிரிழந்திருப்பது,சக தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?