சந்தேக மரணம் அல்ல..கொலை? ஆதாரம் இதோ இருக்கு..! முதியவரால் அதிர்ச்சியில் போலீஸ்...

Apr 17, 2024 - 21:36
சந்தேக மரணம் அல்ல..கொலை? ஆதாரம் இதோ இருக்கு..! முதியவரால் அதிர்ச்சியில் போலீஸ்...

தாக்குதலில் உயிரிழந்த தனது தம்பியின் இறப்பை சந்தேக மரணம் என FIR-ல் பதிவு செய்துள்ளதாக  முதியவர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், குற்றவாளிகள் மீதும் காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அண்ணாசாலை பூத பெருமாள் தெரு பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன். 70 வயதான இவர், தனது தம்பி கோவிந்தசாமி, தங்கை லோகநாயகி மற்றும் தங்கையின் மகன் ஹரிஹரனுடன் வசித்து வருகிறார். எல்லப்பன் மற்றும் கோவிந்தசாமி ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் அதே பகுதியில் பைக் மெக்கானிக்காக பணி செய்து வந்தனர். 

இந்த நிலையில் கடந்த மார்ச் 8-ஆம் தேதி எல்லப்பன் வீட்டின் அருகே துக்க நிகழ்வு நடைபெற்றது. அப்போது வீட்டின் அருகே இருந்த இருசக்கர வாகனங்களை எடுக்குமாறு பாலாஜி என்பவர் கூறியுள்ளார். அந்த நேரம் கோவிந்தசாமி வெளியே சென்று விட்டு தாமதமாக வந்ததால் ஆத்திரமடைந்த பாலாஜி, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது துக்க நிகழ்விற்கு வந்திருந்த சிலர், மதுபோதையில் அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 


பிரேத பரிசோதனையில் மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவிந்தசாமி உயிரிழந்த விவகாரத்தை போலீசார் சந்தேக மரணம் எனவும் கீழே விழுந்ததால் உயிரிழந்ததாகவும் FIR-ல் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த கோவிந்தசாமியின் அண்ணன் எல்லப்பன், தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகளை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். மேலும், காவல் ஆணையர் அலுவலகம், டிஜிபி அலுவலகம் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

அந்தப் புகாரில், தாக்குதல் காரணமாகவே கோவிந்தசாமி உயிரிழந்ததாகவும் ஏற்கனவே அவரை கொலை செய்துவிடுவேன் என பாலாஜியின் மகன் மிரட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, கோவிந்தசாமியின் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்யாமல் சந்தேக மரணம் என FIR-ல் பதிவு செய்த காவல் ஆய்வாளர் சக்தி மற்றும் உதவி ஆய்வாளர் சேகர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எல்லப்பன் வலியுறுத்தியுள்ளார். 

60 வயதான முதியவரின் மரணத்திற்கு நீதிகேட்டு அவரது அண்ணன் முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை சென்று புகார் அளித்திருக்கும் இந்த சம்பவம் தற்போது பேசு பொருளாகியுள்ளது. அவரது புகார் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow