கால-அவகாசம் கிடையாது... டெல்லிக்கு பறந்த பருத்திவீரன்.. விசாரணை வளையத்துக்குள் இயக்குநர் அமீர்!

டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமை அலுவலகத்தில்  இயக்குநர் அமீர் வழக்கறிஞருடன் விசாரணைக்கு ஆஜாராகியுள்ளார். 

Apr 2, 2024 - 13:16
கால-அவகாசம் கிடையாது... டெல்லிக்கு பறந்த பருத்திவீரன்.. விசாரணை வளையத்துக்குள் இயக்குநர் அமீர்!

டெல்லியில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி 50 கிலோ ரசாயன போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அதில், கடந்த 3 ஆண்டுகளில் 3ஆயிரத்து500 கிலோ போதைப்பொருள் கடத்தப்பட்டிருப்பதாகவும், அதன் மதிப்பு ரூ.2,000 கோடிக்கும் மேல் இருக்கும் எனவும் அதிர்ச்சி தகவல் வெளியானது. இதைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில் இச்சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டது திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பது தெரிய வந்தது. 

ஜாபர் சாதிக் குறுக்கு வழியில் தான் சம்பாதித்த பணத்தை சினிமா துறையில் முதலீடு செய்ததும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளராக இருந்துகொண்டு பல்வேறு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதும் வெளிச்சத்திற்கு வந்தது. 

இதனையடுத்து அவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அத்துடன் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் மார்ச்-9ஆம் தேதி ஜாபர் சாதிக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்து இயக்குநர் அமீருக்கும் இதில் தொடர்பிருக்கலாம் என தகவல் பரவியது.

இதனையடுத்து அமீர் அனைத்து விசாரணைக்கும் தான் ஒத்துழைப்பதாகவும், இந்த சம்பவத்தில் தனக்கு துளியிம் தொடர்பில்லை எனப்பேசி  ஆடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு இருந்தார்.  இந்த சூழ்நிலையில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் அமீரை விசாரணைக்கு அழைத்தனர். இதனிடையே, நோன்பு காலம் என்பதால் ரம்ஜான் முடிந்த பிறகு தான் விசாரணைக்கு ஆஜாராக அனுமதிக்க வேண்டும் அவர் கடிதம் எழுதி கேட்டுக்கொண்டார். ஆனால், அதனை ஏற்க மறுத்த போதைப்பொடுள் தடுப்புப்பிரிவு போலீசார் உடனடியாக டெல்லி வந்து விளக்கமளிக்க உத்தரவிட்டனர். 

இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமை அலுவலகத்தில் தனது வழக்கறிஞருடன் இயக்குநர் அமீர் ஆஜராகியுள்ளார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமீர் கூறியுள்ள தகவல்கள் யாருக்கு ஆபத்தாக முடியப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow