காதல் பண்றதுக்காகவே தாடி வளர்க்கிறார்கள்- மதுரையில் ஆடி, பாடி கலக்கிய சீயான் விக்ரம்

”முன்பெல்லாம் காதல் தோல்வி என்றால் தாடி வளர்ப்பார்கள்.. இப்போது காதலிப்பதற்காகவே தாடி வளர்க்கிறார்கள்” என மதுரையில் நடைப்பெற்ற ”வீர தீர சூரன் 2” திரைப்பட ப்ரோமோஷன் நிகழ்வில் நடிகர் சீயான் விக்ரம் பேசியுள்ளார்.

Mar 25, 2025 - 16:26
Mar 30, 2025 - 17:12
காதல் பண்றதுக்காகவே தாடி வளர்க்கிறார்கள்- மதுரையில் ஆடி, பாடி கலக்கிய சீயான் விக்ரம்
veera dheera sooran 2 film promotion

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண்குமாரின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ளது 'வீர தீர சூரன் 2' திரைப்படம். மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷரா விஜயன், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 27 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

நடிகர் விக்ரம் மற்றும் படக்குழுவினர், பட வெளியீடு தொடர்பாக நேர்க்காணல், கல்லூரி நிகழ்வு என பம்பரமாக சுற்றி படத்தின் ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மதுரை மாவட்டம் பறவை பகுதியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் நடைப்பெற்ற நிகழ்வில் நடிகர் விக்ரம் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

கல்லூரி மாணவிகள் நடிகர் விக்ரமை கண்டு ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிலர் பரிசுகள் வழங்கி விக்ரமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து விக்ரம் பீமா படத்தில் இடம்பெற்றிருக்கும் ’எனதுயிரே’ பாடலை பாட, மாணவிகளும் உற்சாகமாக கரகோஷங்களை எழுப்பி விக்ரமுடன் இணைந்து பாட்டு பாடினர்.

நானும் மதுரைக்காரன் தான்:

படத்தின் இயக்குநர் அருண்குமார் பேசுகையில், ”நானும் மதுரை தான். பறவை பகுதியை சேர்ந்தவன். இதுவரை இந்த கல்லூரிக்குள்ளே வந்ததில்லை, முதல் முறையாக இங்கு வந்துள்ளேன். உங்களின் எனர்ஜிக்கு நன்றி. படத்தை நிச்சயம் பாருங்கள், உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். சித்தா திரைப்படத்திற்கு நீங்கள் தந்த ஊக்கத்தால்தான் இந்தப் படத்தை சிறப்பாக எடுக்க முடிந்தது. வருகிற 27 ஆம் தேதி படம் வெளியாகிறது. என் முந்தைய படங்களுக்கு தந்த ஆதரவினைப் போன்று இந்த படத்திற்கும் உங்களின் ஆதரவினைத் தாருங்கள்” என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து சீயான் விக்ரம் மாணவிகள் மத்தியில் பேசுகையில், “அருண்குமார் சிறந்த இயக்குனர். சித்தா படம் எந்த அளவுக்கு உங்களுக்கு பிடித்ததோ அந்த அளவுக்கு வீர தீர சூரன் திரைப்படமும் பிடிக்கும். எப்போதும் மதுரைக்கு வரும்போது ஒரு எனர்ஜி கிடைக்கும்‌, நன்றாக படியுங்கள்” என்றார்.

தாடி வளர்க்கிற ட்ரெண்ட் மாறிடுச்சு:

தொடர்ந்து சில நக்கல் ஆன கேள்விகளுக்கு பதில் அளித்த விக்ரம், ”முன்பெல்லாம் காதல் தோல்வி என்றால் தாடி வளர்ப்பார்கள்.. இப்போது காதலிப்பதற்காகவே தாடி வளர்க்கிறார்கள். தொடர்ச்சியாக இப்போது எல்லா படத்திலும் நானும் தாடி வைத்து நடிக்கிறேன்” என்றார். எப்படி ப்ரொபோஸ் செய்து பெண்களை கவர்வது என்று மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு, “நான் ஆண்கள் கல்லூரியில் படித்தேன். அங்கு மூன்று‌ பெண் தான்‌ இருந்தார்கள். அதில் ஒருவர் சிஸ்டர், ஒருவர் ஆசிரியர், மற்றொருவர் எனது தாய் வயதில் இருந்தவர். அதனால், யாரையும் காதல் செய்ய இயலவில்லை. இங்கு வந்து பார்த்தால் இவ்வளவு பேர் இருக்கிறீர்கள்.. நான் ஏன் இந்த கல்லூரியில் படிக்கவில்லை என்று வருத்தமாக உள்ளது” என்று நகைச்சுவையாக பதில் அளித்தார்.

Read more: மோகன்லாலின் எம்பூரான் திரைப்படம்.. மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கல்லூரி முதல்வர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow