இயக்குனர் மணிகண்டன் வீட்டில் திருடப்பட்ட தேசிய விருதுகளை மன்னிப்பு கடிதத்துடன் வைத்துச் சென்ற திருடர்கள்

"அய்யா எங்களை மன்னித்துவிடுங்கள்..உங்கள் உழைப்பு உங்களுக்கு..." என கடிதம் எழுதி வைத்துள்ளனர்.

Feb 13, 2024 - 10:25
Feb 13, 2024 - 10:56
இயக்குனர் மணிகண்டன் வீட்டில் திருடப்பட்ட தேசிய விருதுகளை மன்னிப்பு கடிதத்துடன் வைத்துச் சென்ற திருடர்கள்

உசிலம்பட்டியில் இயக்குநர் மணிகண்டன் வீட்டில் பணம், நகை மற்றும் வெள்ளிப் பதக்கங்களைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பல், தேசிய விருதுக்கான இரு வெள்ளிப் பதக்கங்களை மட்டும், மன்னிப்பு கடிதத்துடன் மீண்டும் வீட்டிக்குச்சென்று விட்டுச் சென்றுள்ளனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி எழில் நகரைச் சேர்ந்தவர் இயக்குனர் மணிகண்டன்.காக்கா முட்டை, கடைசி விவசாயி உள்ளிட்ட தேசிய விருது பெற்ற படங்களை இயக்கிய மணிகண்டன் தற்போது பட வேலைக்காக குடும்பத்துடன் கடந்த 2 மாதங்களாக சென்னையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பூட்டி இருந்த இவரது வீட்டில் கடந்த 8ம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த கடைசி விவசாயி திரைப்படத்திற்காக மத்திய அரசு வழங்கிய இரு தேசிய விருதுக்கான வெள்ளிப் பதக்கங்கள், ரூ.1 லட்சம், மற்றும் 5 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

பிரபல இயக்குனர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று மணிகண்டன் வீட்டில் பாலித்தீன் பையில், "அய்யா எங்களை மன்னித்து விடுங்கள்.. உங்கள் உழைப்பு உங்களுக்கு" என்ற மன்னிப்பு கடிதத்துடன் தேசிய விருதுக்கான வெள்ளிப் பதக்கங்களை மட்டும் கொள்ளை கும்பல் தொங்க விட்டுச் சென்றுள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், தேசிய விருதுக்கான பதக்கங்களை கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow