நடிகர் விஜய்க்கு பதவி மீது ஆசை - ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம்

நடிகர் விஜய் கட்சி ஆரம்பிப்பது தேவையற்ற ஒன்று என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

Oct 3, 2024 - 15:58
நடிகர் விஜய்க்கு பதவி மீது ஆசை - ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம்
நடிகர் விஜய்க்கு பதவி மீது ஆசை - ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம்

நடிகர் விஜய் கட்சியின் கொள்ளைகளை அறிவிக்காமல், மாநாடு நடத்துவது என்பது பதவியின் மீது உள்ள ஆசை என காங்கிரஸ் மூத்த தலைவர்  ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரோடு மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற  மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  “தமிழகத்தில் மதுக்கடைகளை மூடினால்  பாதிக்கப்படும் பெயர்களில் முதலில் சீமான் பெயர்தான் இருக்கும் என்றும் அவர் பாதிக்கப்பட கூடாது என்ற அக்கறை உள்ளது என்றார்.  

மதுவிலக்கு ஒரு மாநிலத்தில் மட்டும் செய்துவிட முடியாது என்றும் முழுமையான மது விலக்கு இந்தியாவில் இருந்தது இல்லை என்றும் கூறய அவர், காங்கிரஸ் ஆட்சியில் பர்மீட் முறையில் மது விலக்கு இருந்தது என்றார். 

மேலும்,  முழுமையான மது விலக்கு வேண்டும் என்று சொன்னால் மக்கள் நாங்கள் செய்யும் தவறுகளை உணர்ந்து திருந்தினால் மட்டுமே மதுவிலக்கு முழுமையாக கொண்டு வர முடியும் என கூறினார்.  

மேலும், மதுகடைகளை அதிகமாக மூடினால் கள்ளச்சாராயம் காய்ச்சப்படும், சாராயம் குடித்து பழகியவர்கள் 80% பேர் அடிமையாக உள்ள நிலையில்,  சாராயம் கொடுக்கவில்லை என்றால் மனம் உடல்நிலை கெட்டு போய்விடும் என்பதால், கடுமையான பிரச்சாரம் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி முயற்சி செய்ய வேண்டும் என தெரிவித்த அவர், மதுவிலக்கு என்று சொல்லும் குஜராத், பீகார் மாநிலத்தில் சாராயம் ஆறு போல ஓடிக்கொண்டு இருப்பதாக கூறினார். 

மேலும், ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பாஜக வெற்றி பெற முடியாது என்றும் காங்கிரஸ் தலைமையிலான நல்ல ஆட்சி அமையும் சூழல் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்,  அதிமுக ஓட்டு வங்கி 10 சதவீதம் சரிந்துள்ளது என விஞ்ஞான ரீதியாக இபிஎஸ் சொல்வதாகவும், ஆனால் 25 % முதல் 30% வாக்கு வங்கி சரிந்துள்ளதாக கூறிய அவர், அதிமுக பாஜகவுடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பு காரணமாக வாக்கு வங்கி சரிந்து கொண்டே வருகிறது என்றார். 

நடிகர் விஜயை தனது மகனாக பார்ப்பதாகவும்,  எல்லோருடைய வீட்டுப் பிள்ளையாக நடிகர் விஜய் உள்ள நிலையில், ஒரு சின்ன வட்டத்தை போட்டுக்கொண்டு அதில் இருப்பேன் என்று சொன்னால் யார் அதை ஏற்றுக்கொள்ளவார் என கூறினார். மேலும், நடிகர் விஜய் முதலில் எதற்காக கட்சி ஆரம்பித்து இருக்கிறார் எனவும் , கட்சி ஆரம்பித்த காரணம் அவருக்கே தெரியவில்லை என்றும் கூறிய ஈவிகேஎஸ் இளங்கோவன், ஒவ்வொரு கட்சியும் தொடங்குவதற்கு, ஆரம்பிக்கப்பட்டது குறித்து மூலக்கரு உள்ளதாகவும், ஆனால் இதெல்லாம் விஜயக்கு புரியவில்லையோ என்ற அவர்,  நடிகர் விஜய் கொடியை அறிவித்த நிலையில் கொடியில் சொல்ல வருவது என்ன?  இரண்டு யானைக்கு விளக்கம் என்ன ? என்பதை சொல்லவில்லை என்றும் கொள்கைகள் அறிவிக்காமல், மாநாடு நடத்தப்படுவது, எம்எல்ஏ , எம்பி பதவி மீது ஏதாவது ஆசை இருந்தால் வெளிப்படையாக சொல்லிவிட வேணடும் என கூறினார். 

மேலும், நீட் எதிர்ப்பு, பெண் சுதந்திரம் என்று சொல்லக்கூடிய நடிகர் விஜய்,  காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட வேண்டும் என்றும், அல்லது நடிகர் விஜய் சொல்லும் கொள்கைகள் காங்கிரஸ்லும் திமுகவில் இருக்கும் நிலையில் , எந்த கட்சி பிடித்ததோ, அதில் இணைந்து விடாமல், எதற்காக தனி ராஜ்யம் என கேள்வி எழுப்பிய ஈவிகேஎஸ் இளங்கோவன், ஏற்கெனவே நடிகர்கள் கமல்ஹாசன், டி.ராஜேந்திரன், கருணாஸ் ஆகியோர் கட்சி ஆரம்பித்து வீட்டுக்கு போய்விட்ட நிலையில், நடிகர் விஜய் கட்சி ஆரம்பிப்பது தேவையற்ற ஒன்று என தெரிவித்தார்.  

மேலும், உதயநிதி துணை முதல்வரானதை குடும்ப அரசியல் என்கின்றனர். இந்திய அளவில் பாருங்கள். உ.பி.யில் என்ன நடந்தது.  ஆந்திராவில், கர்நாடகாவில் என்ன நடந்தது. குடும்ப அரசியல் தமிழகத்தில் மட்டும் நடப்பதாக கூறாதீர்கள். ஒருவருக்கு திறமையும், வாய்ப்பும் இருந்தால், அவரை அங்கீகரிப்பதில் தவறில்லை. ஒருவருக்கு அனுபவம் என்பது நாள், மாத கணக்கில் வருவதில்லை. எவ்வளவு சீக்கிரம் புரிகிறீர்கள், அதன் மீது வேகமாக கருத்து வருவதை வைத்துதான் பார்க்க வேண்டும். இந்திராகாந்தி பிரதமரானபோது, ‘நேருவின் மகள் என்பது தவிர, இவருக்கு என்ன தகுதி உள்ளது’ என வாஜ்பாய் கேட்டார். பாகிஸ்தான் போரில், அந்நாட்டையே, 2 ஆக பிரித்தபோது, ‘அவர் முகத்தில் காளிமாதேவியை பார்க்கிறேன்’ என்றார். அதை விடுத்து யாரையும் கொச்சைப்படுத்துவது நியாயமல்ல என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow