கச்சத்தீவு விவகாரத்தை கையிலெடுப்பது தேர்தல் நாடகம்! முதலமைச்சர் ஸ்டாலின் விளாசல்
கச்சத்தீவு குறித்து பேசும் பிரதமர் நரேந்திர மோடி, அருணாச்சல் விவகாரத்தில் சீனாவின் நடவடிக்கை குறித்து ஏன் வாய் திறக்கவில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் வேலூர் கதிர்ஆனந்த், அரக்கோணம் ஜெகத்ரட்சகனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மக்கள் விரோத சட்டங்களை பாஜக கொண்டு வரும் போது எடப்பாடி பழனிசாமி என்ன செய்துகொண்டிருந்தார். பழனிசாமி தற்போது சிறுபான்மையினர் மீது திடீர் பாசம் காட்டி வருகிறார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக வாக்களித்தபோது, சிறுபான்மையினருக்கு அதிமுக அமைதியாக இருந்து துரோகம் செய்துகொண்டிருந்ததாக முதலமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
அரசியல் லாபத்துக்காக தற்போது கச்சத்தீவு பற்றி பாஜகவினர் பேசி வருகின்றனர். வெளியுறவுத் துறை செயலாளராக இருந்தபோது கச்சத்தீவை இலங்கைக்குச் சேர்ந்தது ஜெய்சங்கர். கச்சத்தீவு பற்றி பேசும் பிரதமர் மோடி, அருணாசலப் பிரதேசத்தில் 30 இடங்களுக்கு மேல் சீனா பெயர் சூட்டியுள்ளது குறித்து பிரதமர் மோடி ஏன் வாய் திறக்கவில்லை என மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். கடந்த பத்தாண்டு காலத்தில் பிரதமர் மோடி, எத்தனை முறை இலங்கைக்குப் பயணம் செய்தார். அப்போதெல்லாம் ஒருமுறையாவது கச்சத்தீவை மீண்டும் கேட்டிருக்கிறாரா? இலங்கை அதிபரைச் சந்தித்தபோதெல்லாம் கச்சத்தீவு இந்தியாவுக்குதான் சொந்தம் என்று சொல்லியிருக்கிறாரா? அப்போதெல்லாம் கச்சத்தீவு மோடியின் ஞாபகத்துக்கு வரவில்லை என்று முதலமைச்சர் விமர்சித்துள்ளார்.
What's Your Reaction?