தொடர்ந்து உடையும் I.N.D.I.A கூட்டணி.. கழன்று கொண்ட முக்கிய புள்ளி..! இத்தனை கட்சிகள் தான் மிச்சமா?

Feb 15, 2024 - 18:00
தொடர்ந்து உடையும் I.N.D.I.A கூட்டணி.. கழன்று கொண்ட முக்கிய புள்ளி..! இத்தனை கட்சிகள் தான் மிச்சமா?

I.N.D.I.A கூட்டணிக்கு கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஜம்முகாஷ்மீரில் தனித்துப் போட்டியிடுவதாக முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக தலைமையிலான NDA கூட்டணியும், மறுபுறம் I.N.D.I.A கூட்டணியும் தேர்தல் பிரசாரம், கூட்டணிப் பேச்சுவார்த்தை என தொடர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஏற்கனவே I.N.D.I.A கூட்டணியில் இருந்து முக்கிய தலைவர்களான மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் விலகி விட்டனர்.

மாநிலத்தில் நிலவிய பல்வேறு கட்சிப்பூசல்களால் மேற்குவங்கத்தில் தனித்துப் போட்டியிடுவதாக மம்தா பானர்ஜி அறிவித்த நிலையில், பஞ்சாப்பில் தனித்துப் போட்டி எனக்கூறிய போதும் I.N.D.I.A கூட்டணியுடன் அரவிந்த் கெஜ்ரிவால் இணக்கமாக இருந்து வருகிறார். I.N.D.I.A கூட்டணி உருவாகக் காரணமாக இருந்த நிதிஷ்குமார், திடீரென விலகி பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இணைந்து மீண்டும் முதலமைச்சரானார்.

இந்தியா கூட்டணியில் இருந்த ராஷ்ட்ரிய லோக் தள கட்சியும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு சென்றது. இதனால் I.N.D.I.A கூட்டணி மக்களவைத் தேர்தல் வரை நீடிக்குமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் கூட்டணிக்கு மற்றுமொரு பின்னடைவாக ஜம்முகாஷ்மீரில் தனித்துப் போட்டியிவதாக முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்த ஃபரூக் அப்துல்லா, I.N.D.I.A கூட்டணியின் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்றார். நாட்டைக் காக்க வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைய வேண்டிய சூழலில் உள்ளோம் என முன்னதாக அவர் தெரிவித்த நிலையில், I.N.D.I.A கூட்டணியில் இருந்து அவர் வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

இதுதொடர்பாகப் பேசியபோது, சீட் பங்கீட்டைப் பொறுத்தவரை தேசிய மாநாட்டுக் கட்சி தனது சொந்த பலத்தில் தேர்தலில் போட்டியிடும் எனவும் இதுவே இறுதி முடிவு - இனி கேள்வி இருக்கக் கூடாது எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். மாநில கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சமீபத்தில் ஃபரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதும், அதனை அவர் நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் I.N.D.I.A கூட்டணியில் தற்போது வரை அங்கம் வகித்து வருகின்றன. தேசிய அளவில் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் I.N.D.I.A கூட்டணியின் பகுதியாக இருந்துவரும் போதும், மாநிலத்தின் தன்மைக்கேற்க விரிசல்களுடன் செயல்படுவதும் கவனிக்கத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow