சாம்சங் ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினர் - பேச்சுவார்த்தையில் உடன்பாடு 

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக ஈடுபட்டு வந்த சாம்சங் நிறுவன ஊழியர்கள், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பணிக்குத் திரும்பியுள்ளனர். 

Oct 17, 2024 - 15:11
சாம்சங் ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினர் - பேச்சுவார்த்தையில் உடன்பாடு 
samsung

சாம்சங் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நாடறிந்தது. சாம்சங்க ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் தொடங்க அனுமதி, 8 மணி நேர வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி 1,500க்கும் மேற்பட்ட சாம்சங் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கம்யூனிஸ்ட் கட்சிகள் தீவிரமாக இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். 36 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் முடிவு எட்டப்படாமலேயே போராட்டம் நீடித்து வந்தது. தமிழ்நாடு அரசு சாம்சங் நிறுவனத்துக்கு ஆதரவாக நின்று இப்போராட்டத்தை நிறுத்தப் பார்க்கிறது என்கிற விமர்சனங்கள் எழுந்தன. போராட்டத்தை நடத்திய ஒருங்கிணைப்பாளர்களை பேருந்தில் ஏறிக் கைது செய்தது மற்றும் வீடுகளில் புகுந்து கைது செய்தது என்பது போன்ற நிறைய குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. 

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் ஆகியோா் அடங்கிய குழுவை முதல்வா் மு.க.ஸ்டாலின் நியமித்தார். இந்தக் குழு சாா்பில் அதிகாரபூா்வமாக இரண்டு முறை பேச்சுவாா்த்தை நடத்திய போதும் எந்த முடிவும் எட்டப்படாமல் சாம்சங் ஊழியா்களின் போராட்டம் தொடா்ந்தது. தமிழக அரசு மீண்டும் பேச்சுவாா்த்தையை நடத்தும் என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்திருந்த நிலையில், கடந்த திங்கள்கிழமையன்று தலைமைச் செயலகத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அமைச்சா்கள் எ.வ.வேலு, டி.ஆா்.பி. ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் சிஐடியு நிா்வாகிகள் அ.செளந்தரராஜன், முத்துகுமாா் ஆகியோருடன், சாம்சங் பணியாளா்களும் பங்கேற்றனா். இந்தப் பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் பேச்சுவார்த்தை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. 

செவ்வாய்க்கிழமை அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் தொழிலாளா்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது. மாநிலத்தில் தொழில் அமைதி மற்றும் பொது அமைதி காக்கும் வகையில் தொழிலாளா்கள் வேலைநிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்குச் செல்ல வேண்டும். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள், மீண்டும் பணிக்குத் திரும்பும்போது அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்துக்காக எந்தவித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பும் தொழிலாளா்கள் நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், நிா்வாகத்துக்கு எதிராக எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. தொழிலாளா்கள் முன்வைத்த ஊதிய உயா்வு, பொது கோரிக்கையின் மீது எழுத்துபூா்வ பதிலுரையை சமரச அலுவலா் முன் சாம்சங் நிா்வாகம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை தொழிலாளா்களும், சாம்சங் நிறுவனமும் ஏற்றுக் கொண்டதால் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது. 

இந்நிலையில் இன்று காலை பத்து மணிக்கு வேலைக்கு வருமாறு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சாம்சங் நிர்வாகம் சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட நிலையில், ஒரு மாதத்துக்குப் பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் இன்று பணிக்குத் திரும்பினர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow