நோய் தீர்க்கும் தன்வந்திரி....குடை பிடித்த கோவர்த்தனர்!

ஐப்பசி மாதத்தில் வரும் தனத்திரயோதசி, தன்வந்திரி ஜெயந்தி, கோவர்த்தன தினம், கேதார கவுரி விரதம், பாபாங்குசா ஏகாதசி உள்ளிட்ட விசேஷ நாட்களின் வழிபாட்டு முறைகள், அவற்றின் சிறப்புகள் மற்றும் கிடைக்கும் என நம்பப்படும் ஆன்மிகப் பலன்களைத் தெரிந்துகொள்வோம்.

Oct 17, 2026 - 07:00
நோய் தீர்க்கும் தன்வந்திரி....குடை பிடித்த கோவர்த்தனர்!

பலன் தரும் பரிகாரம்! - வி.ராம்ஜி

ஐப்பசி மாதம் என்பது அற்புதமான மாதம். ஐப்பசி மாதத்தில் அனைத்துக் கடவுளரையும் வழங்குவதற்கான விழாக்களும் வழிபாடுகளும் பூஜைகளும் உண்டு.அந்த வழிபாடுகளைச் செய்தாலே மனமது செம்மையாகிவிடும். இல்லத்திலும் உள்ளத்திலும் நிம்மதியும் அமைதியும் நிரந்தரமாகக் குடிகொள்ளும் என்பது ஐதீகம்!

ஐப்பசி மாதத்தில் தேய்பிறைக் காலத்தில் வருகிற திரயோதசி என்பது மிகமிக முக்கியமான விரதமாக சொல்லப்பட்டிருக்கிறது. திரயோதசி திதி என்பது பிரதோஷ நன்னாள். சிவ வழிபாட்டுக்கு உகந்த நாள்தான்! அதேவேளையில் திருமகளின் அருளும்பொருளும் நமக்கு அள்ளக்க்குறையாமல் கிடைக்கிற நாளும் கூட! அதனால்தான் ஐப்பசி திரயோதசியை தன திரயோதசி என்று போற்றுகிறார்கள்.

அன்றைய தினம் தீபாவளிக்கு வேண்டிய பொருட்களையும் துணிகளையும் ஆபரணங்களையும் வாங்கி மகிழ்வது அந்தக் காலத்தில் வழக்கமாக இருந்தது. இதனால்தான், திரயோதசியிலும் தீபாவளியின் போதும் லட்சுமி பூஜை செய்வதும் லட்சுமி குபேர பூஜை செய்தும் வழிபடச் சொல்லியிருக்கிறார்கள். அட்சய திருதியை நாளில், மகாலட்சுமியை வழிபட்டு ஆராதித்து பிரார்த்தனை செய்தால், என்னென்ன பலன்கள் கிடைக்குமோ அத்தனைப் பலன்களும் கிடைக்கும் அற்புத நாள் என்று ஐப்பசி திரயோதசியையும் குறிப்பிடுகிறார்கள் ஆச்சார்யர்கள்!

தனத்திரயோதசி அன்று நாம் சர்க்கரை, அல்லது உப்பு அல்லது அரிசி என வெண்மை நிறப் பொருட்கள் வாங்குவது உத்தமம். வெண்மை நிறப் பொருட்கள் வாங்கி வீட்டில் வைத்தால், தனம் தானியம் பெருகும். தங்கம் முதல் சாதாரண இரும்பு பொருட்கள் வரை நமது வீட்டுக்கு தேவையான பொருட்கள் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

தன்வந்திரி ஜெயந்தி மகாவிஷ்ணுவை தன்வந்திரியாக அதாவது நோய் தீர்க்கும் மருத்துவனாகக் கொண்டாடுகிறோம். வழிபடுகிறோம். வளமும் ஆரோக்கியமும் பெற்று ஆயுளுடன் வாழச் செய்வார் தன்வந்திரி பகவான்.

திருமால் மக்களுக்காக மருத்துவராக தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தியாகும்.நோய் வராமல் நல்ல உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்க தன்வந்திரி வழிபாடு செய்யப்படுகிறது. ஐப்பசிமாதத்தில் தேய்பிறை திரயோதசி அன்று திரயோதசி வேளையில் தன்வந்திரி பகவான் தோன்றினார். எனவே திரயோதசி வேளையில் தன்வந்திரி பகவானை வழிபட நோய் நொடியின்றி வாழலாம்; ஆரோக்கியமான, ஆனந்தமான வாழ்க்கை அமையும்!
.
ஸ்ரீ தன்வந்திரி, விஷ்ணு அம்சமாக பின்னிரு கரங்களில் சங்கு,சக்கரத்துடனும் முன் வலக்கையில் அட்டைப்பூச்சியை ஏந்தியும்,இடக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி அளிக்கிறார். பண்டைய கால மருத்துவமுறையில், நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப்பூச்சிகள் பயன்படுத்தப்பட்டன என்பதை நாம் அறிவோம்.

பத்து அவதாரம் எடுத்தவர் என்று மகாவிஷ்ணுவைச் சொன்னாலும் தசாவதாரம் மட்டுமின்றி மொத்தம் 24 அவதாரங்களை பெருமாள் நிகழ்த்தினார் என்றும் இதில் 17ஆவது அவதாரம் தன்வந்திரி அவதாரம் என்றும் விஷ்ணு புராணம் விவரிக்கிறது. தன்வந்திரி பகவானை, தேவர்களின் மருத்துவர் என்றும் அழைப்பார்கள்.

ஆகவே, ஐப்பசி மாதத்தின் திரயோதசி திதி நன்னாளில், பிரதோஷ நாளில், தன்வந்திரி பகவானை நினைத்து வழிபடலாம். நம்மால் முடிந்த அளவுக்கு நோய்வாய்ப்பட்ட எவருக்கேனும் மருந்து மாத்திரை வழங்கி உதவி செய்யலாம். நமக்கு ஆரோக்கிய விருத்தியையும் ஆயுள் விருத்தியையும் தந்து காத்தருளுவார் தன்வந்திரி பகவான்!

கோவர்த்தன தினம்

ஐப்பசி மாதத்தின் தேய்பிறை காலம் என்பது அமாவாசைக்கு முந்தைய காலம். வளர்பிறை காலம் என்பது அமாவாசைக்கு மறுநாளில் இருந்து தொடங்குகிறது. ஐப்பசி வளர்பிறை பிரதமை அன்று கிருஷ்ண பகவான் கோகுலத்து மக்களை கடும் மழையில் இருந்தும் புயல் காற்றிலிருந்தும் காத்தருளினார் என்றும் கோவர்த்தன மலையையே குடையாக்கினார் என்றும் சொல்கிறது புராணம்.

ஐப்பசி மாதத்தின் அமாவாசைக்கு அடுத்தநாள், வளர்பிறை தொடங்குகிறது. அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதி. பிரதமை என்றால் முதல், முதன்மை, ஒன்று என்று அர்த்தம். பிரதமர் என்கிற இந்தச் சொல் இதிலிருந்துதான் வந்தது. பிரதி என்றும் ஜெராக்ஸ் என்றும் சொல்கிறோம். அதாவது ஒன்று என்பதைக்  குறிக்கிற சொல் இது! கோகுலத்து மக்களை பெருமழையில் இருந்தும் கடும் புயல் தாக்கத்தில் இருந்தும் பிரம்மாண்டமான மலையையே குடையாகப் பிடித்துக்கொண்டு, கிருஷ்ணர் காத்தருளினார் என்பதால், கிருஷ்ண பரமாத்மாவுக்கு கோவர்த்தனர் எனும் திருநாமமும் அமைந்தது.

ஆகவே இந்தநாளில், கிருஷ்ணர் வழிபாடு செய்வதும் பசுக்களுக்கு பழங்கள், கீரைகள் வழங்கி வேண்டிக்கொள்வதும் எண்ணற்ற பலன்களைத் தரும். குடை, போர்வை, காலணி எனப்படும் செருப்பு என இயலாதவர்களுக்கு தானமாக வழங்கி, கிருஷ்ணரை வழிபட்டால், நம்முடைய கவலைகள் மற்றும் துயரங்கள் நீங்கி வாழ்வில் வசந்தம் வீசும் என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.

நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகியவற்றை அழித்து, நம்மைப் புத்துயிருடன் வாழச் செய்யும் இந்த வழிபாடுகளை குறைவின்றி செய்தால், குறையொன்றுமில்லை, மறைமூர்த்தி கண்ணா என வாழலாம்!

கேதார கவுரி விரதம்

புரட்டாசி மாதம் வளர்பிறை தசமி (விஜயதசமி) முதல் ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது, கேதார கவுரி விரதம். இந்த விரத முறையைப் பின்பற்றியே உமையம்மை சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். இதனால் இறைவன் மாதொரு பாகன், அர்த்த நாரீஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார் என்கிறது சிவபுராணம்.

கேதார கவுரி விரதத்தில், அதிரசம் எனும் இனிப்புப் பண்டத்துக்கு முக்கியத்துவம் உண்டு. அதேபோல், நோன்புச்சரடு கட்டிக்கொள்கிற வழக்கமும் மிக அவசியமானதாகச் சொல்லப்படுகிறது. ஆண்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம் என்றாலும் இங்கே ஆண்டாண்டு காலமாக பெண்களின் பண்டிகையாகவும் கணவரின் ஆயுள் நீடிக்கும் பிரார்த்தனையாகவும் சொல்லப்பட்டு வருகிறது.

ஒரு சிலர் இந்த விரதத்தை கடைசி ஒன்பது நாட்கள் மேற்கொள்வார்கள். ஏழு நாட்கள் விரதம் இருப்பவர்கள், ஐந்து அல்லது மூன்று நாட்கள் மட்டும் விரதம் மேற்கொள்பவர்கள் என இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள், ஐப்பசி அமாவாசை அன்று மட்டும் கேதார கவுரி விரதத்தை அனுஷ்டிப்பவர்களாகவும் இருப்பார்கள். கோயில்களிலும், வீடுகளிலும் கேதார கவுரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

இந்த விரதமுறையை மேற்கொள்வதால் தம்பதி ஒற்றுமையாக வாழ்வார்கள். கருத்துவேற்றுமை இல்லாமல் வாழ்வார்கள். நல்ல வாழ்கைத்துணை அமையப் பெறுவார்கள் என்பது ஐதீகம்!

இதேபோல, ஐப்பசி மாதத்தின் வளர்பிறை காலத்தில் வருகிற ஏகாதசியை பாபாங்குசா ஏகாதசி என்றும் இந்தநாளில் ஆறுகுளங்களில் நீராடினால், அது கங்கையில் நீராடியதற்கு இணையான புண்ணியங்களைத் தரும் என்றும் சொல்லுவார்கள். இது பாவங்களைப் போக்கும் கங்கையில் நீராடிய பலனைக் கொடுக்கும். நோய், பசிப்பிணி நீங்கும்.

நம்முடைய பாவங்களை அகற்றும் அங்குசம் போன்றது இந்த விரதம். கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்கள், யாகங்கள், உயர்ந்த தான- தர்மங்கள் முதலானவற்றால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலன்கள் அனைத்தும் இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதால் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால், எம பயம் விலகும்; மனக்குழப்பங்களும் மனக்கிலேசங்களும் அகலும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

ஐப்பசி மாதத்தில்தான், திருமூலர், நின்றசீர் நெடுமாற நாயனார், இடங்கழி நாயனார், சக்தி நாயனார், பூசலார் நாயனார், ஐயடிகள் காடவர்கோன் முதலான நாயன்மார்களின் குருபூஜை நடைபெறுகிறது.அதேபோல் வைஷ்ணவத்தில், பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய ஆழ்வார்களின் ஜயந்தித் திருநாளும் இந்த மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது.

ஐப்பசி மாதம் எனப்படுகிற துலா மாதத்தை உரிய முறையில் வணங்குவோம். துக்கமெல்லாம் பறந்தோடுவது நிச்சயம்; வேதனைகளெல்லாம் அகலும் என்பது சத்தியம்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow