விமான சாகச நிகழ்ச்சி: 5 பேர் உயிரிழப்புக்கு இது தான் காரணமா?- வெளியானது முதற்கட்ட விசாரணை

உயிரிழந்த ஐந்து நபர்களின் துல்லிய காரணத்தை கண்டறிய ஐந்து நபர்களின் உடல் உள்ளுறுப்பு சாம்பிள்கள் தடயவியல்துறை "விஸ்ரா" ஆய்வுக்கு காவல்துறை அனுப்பியுள்ளது

Oct 8, 2024 - 16:02
விமான சாகச நிகழ்ச்சி: 5 பேர் உயிரிழப்புக்கு இது தான் காரணமா?- வெளியானது முதற்கட்ட விசாரணை
விமான சாகச நிகழ்ச்சி: 5 பேர் உயிரிழப்புக்கு இது தான் காரணமா?- வெளியானது முதற்கட்ட விசாரணை

சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழப்பு குறித்த தகவல் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சியானது கடந்த 6-ம் தேதி சென்னை மெரினா கடற்பரப்பில் நடைபெற்றது. சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்து கொண்டதாகவும் "லிம்கா உலக சாதனை புத்தகத்தில்" இந்த நிகழ்ச்சி இடம் பிடித்து "புதிய உலக சாதனை" படைத்ததாகவும் இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நண்பகல் 11 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை கடும் வெயில் நேரத்தில் வான்சாக நிகழ்ச்சி நடந்ததால் மக்கள் பலர் கடற்கரையிலும், சாலைகளிலும் குடிநீர் கூட கிடைக்காமல் மயங்கி விழுந்தனர். அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் மக்கள் பலர் பெரும் அவதிக்குள்ளாயினர்.

குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் என பலதரப்பட்ட நபர்கள் விமான சாகச நிகழ்ச்சியை கண்டு களிக்க வந்து பெரும் அவதிக்குள்ளாகினர்.5 மணி நேரம் கடந்த மாபெரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து 230 க்கும் மேற்பட்ட நபர்கள் மயக்கம் அடைந்ததனர். இவர்களில் 100 க்கும் மேற்பட்ட நபர்கள், 108 ஆம்புலன்ஸ்  மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு நலமடைந்தனர். மேலும், 93 நபர்கள்  ஓமந்தூரார், ராஜிவ்காந்தி, ராயபேட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தான் நெரிசலில் சிக்கி தவித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களில் ஐந்து நபர்கள் உயிரிழந்தது சம்பவம் வெளியாகி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.நிகழ்ச்சி முடிந்த அடுத்த சில நிமிடங்களில் VVIP.,கள் மற்றும் VIP.,களுக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பட்டால் அவர்கள் எவ்வித சிரமமும் இன்றி சில நிமிடங்களில் தங்களது வீடு போய் சேர்ந்த நிலையில், வந்திருந்த 15 லட்சம் மக்களுக்கும் சாலையில் செல்வதற்கு ஏற்ற வசதிகள் செய்து கொடுக்க தவறியதால் சுமார் 5 மணி நேரத்திற்கு மேற்பட்ட மாபெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், இந்த கூட்ட நெரிசலால் 5 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான்(56), பெருங்களத்துரைச் சேர்ந்த சேர்ந்த சீனிவாசன், ஆந்திராவைச் சேர்ந்த தினேஷ் குமார் வர்ணம்(37),  திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன்(34), மரக்காணத்தைச் சேர்ந்த மணி( 37) ஆகியோர் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.இது தொடர்பாக அண்ணாசதுக்கம் காவல்நிலையம், திருவல்லிக்கேணி காவல் நிலையம், மயிலாப்பூர் காவல் நிலையம், மெரினா காவல் நிலையம், ராயப்பேட்டை காவல் நிலையம் என தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

194 BNSS -  'இயற்கைக்கு மாறான மரணம்' என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டு பின் உடல்கள் நேற்று அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்த நிலையில் உடற்கூராய்வில் உயிரிழப்புக்கான முதற்கட்ட தகவல்கள் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.ஸ்ரீனிவாசனின் இதயத்தில் ஏற்கனவே அடைப்புகள் இருந்ததாகவும், ஜான் என்பவருக்கு Low BP ஏற்பட்டு மயக்கமடைந்து பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும், தினேஷ் குமார் வர்ணம் மற்றும் மணி ஆகியோர் திடிரென ஏற்பட்ட மாரடைப்பு காரணத்தினால் உயிரிழந்ததாகவும் உடற்கூராய்வின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்த ஐந்து நபர்களின் துல்லிய காரணத்தை கண்டறிய ஐந்து நபர்களின் உடல் உள்ளுறுப்பு சாம்பிள்கள் தடயவியல்துறை "விஸ்ரா" ஆய்வுக்கு காவல்துறை அனுப்பியுள்ளது."விஸ்ரா" ஆய்வின் முடிவில் பிரேத பரிசோதனையின் முதற்கட்ட விசாரணை தகவல்கள் மட்டும் காரணமாக அமைந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற துல்லிய தகவல்கள் தெரிவருமென போலீசார் தெரிவித்துள்ளனர்.Viscera ஆய்வு என்பது முக்கியத்துவம் கொண்ட வழக்குகளில் மட்டுமே எடுக்கப்படும்.ஒரு நபர் இறப்பு குறித்த விவரங்கள் பிரேத பரிசோதனையிலேயே பெரும்பாலும் தெரிந்துவிடும்.அதைதாண்டிய துல்லியத்தன்மை கண்டறிய, உடல் உள்ளுறுப்பு, இறந்த நபரின் உடல் திரவங்கள் மற்றும் திசுக்களை ஆய்வு செய்து இறப்புக்கான துல்லிய காரணத்தை கண்டறிய மேற்கொள்ளப்படும் வழிமுறையாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow