முதலில் கிட்னி திருட்டு.. இப்போ கல்லீரல்: திமுக அரசின் சாதனை இதுதானா? அன்புமணி கேள்வி

”சிறுநீரகக் கொள்ளை பதட்டம் தீரும் முன்பே கல்லீரல் திருட்டு. உடல் உறுப்புகளுக்குக் கூட பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியது தான் திமுக அரசின் சாதனையா?” என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலில் கிட்னி திருட்டு.. இப்போ கல்லீரல்: திமுக அரசின் சாதனை இதுதானா? அன்புமணி கேள்வி
anbumani accuses dmk govt failed to protect even human organs in tamil nadu

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதியில் ஏழ்மை நிலையிலுள்ள பொதுமக்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து கிட்னி திருட்டு நடைப்பெற்றுள்ள சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதே பகுதியில் கல்லீரல் திருட்டு தொடர்பான புகார்களும் வெளிவந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்குமாறு நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநருக்கு தமிழக மருத்துவ நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தை உலுக்கியுள்ள உடல் உறுப்புகள் திருட்டு சம்பவம் தொடர்பாக பாமகவின் அன்புமணி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-

”நாமக்கல் மாவட்டத்தில் பெருமளவில் சிறுநீரகக் கொள்ளை நடந்ததால் மக்களிடம் ஏற்பட்ட அச்சமும், பதட்டமும் விலகுவதற்கு முன்பாகவே , அதே மாவட்டத்தில் ஏழைகளைக் குறிவைத்து கல்லீரல் திருட்டும் நடைபெற்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. போதைப் பொருள் விற்பனையில் தொடங்கி  மனித உடல் உறுப்புத் திருட்டு வரை அனைத்து சட்டவிரோத செயல்களையும் திமுக அரசு ஊக்குவித்து வருவது கண்டிக்கத்தக்கது. 

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகரத்தைச் சேர்ந்த 37 வயது  பெண்மணி ஒருவர் கந்து வட்டிக்கு வாங்கியக் கடனை அடைக்க முடியாமல்  தடுமாறி வந்த  நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்  அவரை அணுகிய தரகர்கள் அவரது சிறுநீரகத்திற்கு ரூ.8 லட்சம் விலை பேசியுள்ளனர். அவரை சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஆய்வு செய்த போது அவரது சிறுநீரகத்த்தை மாற்ற முடியாது என்று தெரியவந்துள்ளது.  அதனால், அவருக்கு மருத்துவ ஆய்வு  செய்ய ஆன செலவுகளை தரும்படி அந்த பெண்ணை மிரட்டிய தரகர்கள், ஒரு கட்டத்தில் அவரது கல்லீரலை எடுத்துக் கொண்டு அதற்காக ரூ.4.5 லட்சத்தை மட்டும் கொடுத்துள்ளனர்.”

தடைகளை மீறி உடல் உறுப்பு திருட்டு:

”தமிழ்நாட்டில் இரத்த உறவு இல்லாதவர்களுக்கு உடல் உறுப்புகளைக் கொடையாக வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து விதிகளையும் மீறி  நாமக்கல் மாவட்டத்தில்  வறுமையில் வாடும் மக்களை மூளைச்சலவை செய்து அவர்களின் சிறுநீரகங்களை திருடியுள்ளனர். சிறுநீரகத்தை எடுக்க முடியாத நிலையில் கல்லீரலைத்  திருடியுள்ளனர். அப்படியானால், தமிழ்நாட்டில் உடல் உறுப்பு வணிகம் எந்த அளவுக்கு வெளிப்படையாக நடந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சிறுநீரகம், கல்லீரல்  உள்ளிட்ட உடல் உறுப்புகளை கொள்ளையடித்த கும்பலைச் சார்ந்த முக்கியக் குற்றவாளிகள் எவரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. ஏமாற்றி அழைத்து வரப்பட்ட ஏழை மக்களிடமிருந்து  சிறுநீரகங்களை பறித்து மற்றவர்களுக்கு பொருத்திய திருச்சி மருத்துவமனைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, அவற்றில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு மருத்துவமனை திமுக சட்டப்பேரவை உறுப்பினருக்கு சொந்தமானது  என்பதால் தான் சலுகை காட்டப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.”

அமைச்சரின் விளக்கத்திற்கு கண்டனம்:

”சிறுநீரகம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளைத்  திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய  திமுக அரசு, அவர்களுக்கு சாதகமாக  செயல்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்னும் ஒருபடி மேலே போய்,’’தற்போது நடந்திருப்பது சிறுநீரக திருட்டு அல்ல; சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல் எடுத்தால் தான் திருட்டு. இதை புரிந்துகொள்ள வேண்டும். இது திருட்டு அல்ல; முறைகேடு” என்று கூறியிருக்கிறார். 

தமிழ்நாட்டில் போதை மருந்துக் கடத்தல் முதல் உடல் உறுப்புத் திருட்டு வரை அனைத்தையும் செய்பவர்கள் திமுகவுடன் சம்பந்தப்பட்டவர்கள் தான்.  இத்தகைய சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டிய திராவிட மாடல் அரசு  அத்தகைய குற்றங்களுக்கு துணை போகிறது. தமிழ்நாட்டில் ஏழை மக்களின் உடல் உறுப்புகளுக்குக் கூட பாதுகாப்பு  இல்லாத சூழலை உருவாக்கியது தான்  திமுக அரசின் சாதனை ஆகும். இதற்கெல்லாம் சேர்த்து வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow