MP டி.ஆர்.பாலுவின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்! திமுகவினர் இரங்கல்

மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் மனைவி, ரேணுகாதேவி உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 79.

MP டி.ஆர்.பாலுவின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்! திமுகவினர் இரங்கல்
renukadevi baalu wife of dmk treasurer tr baalu passes away

திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், திமுகவின் நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி அவர்களின் மனைவியும், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர், டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேனுகாதேவி பாலு உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

திமுகவின் டெல்லி முகமாக விளங்கும் எம்பி டி.ஆர்.பாலு, ரேணுகா தேவி என்பவரை 1970 ஆம் ஆண்டு மணந்தார். டி.ஆ.பாலுவுக்கு மொத்தம் 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

டி.ஆர்.பாலு-ரேணுகா தேவி தம்பதியினரின் மகனான டி.ஆர்.பி.ராஜா தற்போது தமிழ்நாடு அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக உள்ளார். டி.ஆர்.பி.பாலுவின் அரசியல் வாரிசாக, டி.ஆர்.பி.ராஜா கருதப்படுகிறார்.

கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகா தேவி உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இன்றையத் தினம், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 79. அவரது உடல் இறுதி மரியாதைக்காக 29, ராமன் தெரு தியாகராய நகர் சென்னை 17 என்ற முகவரியில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேணுகா தேவி மறைவினைத் தொடர்ந்து திமுகவினர் பலர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். திமுகவினர் தவிரத்து அரசியல் கட்சி தலைவர்களும், பிரமுகர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், “திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலு அவர்களின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களின் அன்னையுமான ரேணுகா தேவி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. ரேணுகாதேவி அவர்களை இழந்துவாடும் டி.ஆர் பாலு அவர்களுக்கும், டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி எம்பியுமான டி.ஆர்.பாலு அவர்களின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களின் தாயாருமான ரேணுகா தேவி அவர்கள் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அம்மையாரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க வேண்டிக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow