விஜய் குறித்து பேசிய வழக்கு... முன்ஜாமீன் மறுக்கப்பட்டதும் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jul 3, 2026 - 12:30
விஜய் குறித்து பேசிய வழக்கு... முன்ஜாமீன் மறுக்கப்பட்டதும் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

முதலமைச்சர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு நிலவுகிறது.

கடந்த ஜூன் 20-ஆம் தேதி திருச்செந்தூர் ஆத்தூர் பகுதியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் விஜய்யை ஒருமையில் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, ஆத்தூர் பகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் நகரச் செயலாளர் செல்வம் கொடுத்த புகாரின் பேரில், அவதூறாகப் பேசுதல், இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அனிதா ராதாகிருஷ்ணன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க அனிதா ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று (ஜூலை 3) விசாரணைக்கு வந்தபோது, "7 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த ஒருவர் பொதுவெளியில் மிகுந்த பொறுப்புடனும், கட்டுப்பாட்டுடனும் பேசியிருக்க வேண்டும்" என்று காவல்துறை தரப்பில் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இத்தனை ஆண்டுகள் மக்கள் பிரதிநிதியாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் ஏன் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பேச வேண்டும் எனக் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தனர். மேலும், தற்போதைய சூழலில் அவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி அவரது மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 90 நிமிடத்தில் அனிதா ராதாகிருஷ்ணனைக் காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow