பல நூறு பேரை கொன்றது மோடி அரசு... வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.. முத்தரசன் காட்டம்
நம் நாட்டின் முதுகெலும்பான விவசாய தொழில் செய்யும் விவசாயிகள் கோரிக்கையை ஏற்காமல், பல நூறு விவசாயிகளை கொன்று குவித்தது பாஜகவின் மோடி அரசு என்று முத்தரசன் கடுமையாகப் பேசினார்.
கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி பா ராஜ்குமாரை ஆதரித்து சிபிஐ மாநிலக் குழு செயலாளர் முத்தரசன் பரப்புரை செய்தார். அப்போது பேசிய ஆவர், “நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஏதோ இரண்டு நபர்களுக்கு இடையே நடக்கக்கூடிய தேர்தல் அல்ல.
இந்தத் தேர்தல் மூலமாக தான் நாம் நாட்டைக் காக்க போகிறோமா? கைவிடப் போகிறோமா? என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது. நம்முடைய நாட்டிற்கு பாகிஸ்தானில் இருந்தோ, சீனாவில் இருந்தோ, வேறு எந்த நாட்டில் இருந்தோ ஆபத்து என்பது இல்லை. ஆனால் நம்முடைய நாட்டிற்கு இன்றைக்கு இருக்கும் பெரும் ஆபத்து மோடி ஆட்சிதான். வரக்கூடிய தேர்தலில் தப்பித்தவரி பிஜேபி ஆட்சிக்கு வருமேயானால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நாடாளுமன்றத் தேர்தல் நடக்காது என்று பேசினார்.
மேலும், நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கு எதிராக மூன்று சட்டங்களை பிரதமர் மோடி நிறைவேற்றினார். எல்லா அரசியல் கட்சிகளும் அதனை எதிர்த்து போராடின. விவசாயிகள் கடந்த 16 மாதங்களாக நடத்திய போராட்டம் வரலாற்றில் அழிக்க முடியாத போராட்டம். இதில் பாஜக அரசு மேற்கொண்ட அடக்குமுறைகளில் ஏராளமான விவசாயிகள் உயிர் நீத்தனர். பின்னர் தான் விவசாயிகளுக்கு எதிரான சட்டம் திரும்ப பெறப்பட்டது.
போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என்ற மோடியின் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படாமல், விவசாயிகள் இன்று வரை தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள் என்று விவாசாயிகள் போராட்டத்தைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.
What's Your Reaction?