மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி.. மேடையில் வேட்பாளரை அறிவித்த சீமான்!
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், தற்போதே மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிவித்துள்ளார் சீமான்.

நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 1,13,092 (10%) வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்த பேராசிரியர் இரா.தேன்மொழியே, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மண்ணச்சநல்லூர் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளார் சீமான்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதி, சக்திநகர் பனந்தோப்பு பகுதியில் இன்று தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் கள் விடுதலை மாநாடு
நடைப்பெற்றது.
இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று சிறப்புரையாற்றினார். தனது உரையில், “ஒரி கிணற்றை சுற்றி பத்து பனைமரம் இருந்தால் கடைசிவரை நீரை வற்ற விடாது என மறைந்த ஐயா நம்மாழ்வார் தெரிவித்தார். சீம கருவேல மரங்களை வெட்டு என்று சொன்னால் வெட்ட மாட்டார்கள், பனை மரத்தை வெட்டாதே என்று சொன்னால் வெட்டி விற்பார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல, 840 பொருட்களை பனைமரம் தருகிறது.
தென்னை மரத்தை அதிகம் பராமரிக்க வேண்டும். ஆனால் பனை மரத்தை மட்டையை மட்டும் கிழித்து விட்டால் போதும் தானாக வளர்ந்து விடும். தன் உடலில் எல்லா உறுப்புகளையும் மனிதனின் தேவைக்காக பனைமரம் தருகிறது. தமிழ்நாட்டில் பல அணைகளை கட்டியவர் காமராஜர். பல பள்ளிக்கூடங்களை திறந்து படிக்க வைத்தவர் காமராஜர். பல மதுக்கடைகளைத் திறந்து குடிக்க வைத்தவர் கருணாநிதி (மறைமுகமாக குறிப்பிட்டார்). காமராஜரின் சமாதி எங்கு இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. அவரது சமாதி 200 கோடியில் கடற்கரையில் உள்ளது. இந்த சமாதி கட்டியவர்களுக்கெல்லாம் நாம் வந்து சமாதி கட்ட வேண்டும்” என பேசினார்.
மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி NTK வேட்பாளர்:
இதனைத் தொடர்ந்து, மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தேர்தலில் இரா.தேன்மொழி நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என மேடையில் அறிவித்தார், சீமான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக இரா.தேன்மொழி களமிறங்கினார்.
திமுகவின் வேட்பாளராகிய அருண் நேரு 6 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றியடைந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட தேன்மொழி 1,13,092 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு தேர்தல் நடைப்பெற உள்ள சூழ்நிலையில் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளரே தற்போதே அறிவித்து கவனத்தை ஈர்த்துள்ளார் சீமான்.
What's Your Reaction?






