சூர்யகுமார் யாதவின் அசத்தல் சதத்தால் ஐதராபாத்தை வீழ்த்தியது மும்பை...
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நடப்பு ஐ.பி.எல் தொடர் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்திருக்கிறது. ஆனால், மற்ற இரண்டு இடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸை வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட், 30 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்சர் என 48 ரன்களை குவித்தார். 11 ரன்களில் அபிஷேக் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து களமிறங்கிய மயங்க் அகர்வால், 5 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து ஐதராபாத் அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழத் தொடங்கின. நிதிஷ்குமார் ரெட்டி 20 ரன்கள், மார்கோ ஜான்சன் 17 ரன்கள், பேட் கம்மின்ஸ் 35 ரன்கள் அடித்தனர்.
20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் அடித்தது. மும்பை அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா மற்றும் பியூஸ் சாவ்லா தலா 3 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் அன்ஷுல் கம்போஜ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 174 ரன்கள் இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்தது. ஐதராபாத் அணியின் பந்துவீச்சால் முதலில் மும்பை அணி திணறிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷான் 9 ரன்களிலும், ரோஹித் சர்மா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய நமன், ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்து ஐதராபாத் அணியை திணற வைத்தனர். 51 பந்துகளில் சூர்யகுமார் யாதவ் 102 ரன்களும் திலக் வர்மா 37 ரன்களும் அடித்து அசத்தினர். இருவருடைய அதிரடி ஆட்டத்தால் ரன்கள் கிடுகிடுவென உயர்ந்த நிலையில், 17.2 ஓவர்களில் 174 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அசத்தல் வெற்றி பெற்றது. ஐதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் மார்கோ ஜான்சன் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததால் ஐதராபாத் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் கட்டாயம் இரண்டு போட்டிகளாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
What's Your Reaction?