அமித்ஷாவுடன் ஒரே மேடையில் எடப்பாடி: உறுதியானது பாஜக-அதிமுக கூட்டணி!

பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி பேசி வந்த நிலையில், இன்று ஒரே மேடையில் அமித்ஷாவுடன் இணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியாக போட்டியிடுவோம் என உறுதி செய்துள்ளனர்.

Apr 11, 2025 - 18:38
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் எடப்பாடி: உறுதியானது பாஜக-அதிமுக கூட்டணி!
bjp aiadmk alliance confirmed for tamil nadu assembly election 2026

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். 

அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தமிழ் மக்களுக்கு பங்குனி உத்திரம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும். ஜெயலலிதா இருந்த காலம் முதலே அதிமுகவுடன் இணைந்து பாஜக பயணித்து வருகிறது. தேசிய அளவில் மோடி தலைமையிலும், மாநில அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் தேர்தலை சந்திக்க உள்ளோம். 1998 முதல் அதிமுகவுடன் பாஜக தொடர்ந்து கூட்டணி அமைத்து வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சியை அமைக்க போகிறது. எடப்பாடி தலைமையில் தான் கூட்டணி அமையப்போகிறது. அதிமுக தரப்பில் இருந்து ஒரு நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. யார், யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது பற்றி தற்போது முடிவு செய்யப்படவில்லை” என்று தெரிவித்தார்.

பாஜக மாநிலத்தலைவர்: நயினார் நாகேந்திரன்

தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் பொறுப்புக்கு நயினார் நாகேந்திரனிடமிருந்து மட்டுமே விருப்பமனு பெறப்பட்டுள்ளது. இதனால், நாளை அதிகாரப்பூர்வமாக பாஜகவின் மாநிலத்தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட உள்ளார். இதனைத் தொடர்ந்து, தற்போதைய பாஜகவின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விலக உள்ளார்.

இதுத்தொடர்பாக அமித்ஷா வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழ்நாடு பாஜக தலைவராக, அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார். பிரதமர் அவர்களின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி, அண்ணாமலை அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலை அவர்களின் நிறுவனத் திறன்களை பாஜக பயன்படுத்தும்.” எனத் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow