2026 சட்டசபை தேர்தலுக்கு வியூகம்... அமைச்சரவை மாற்றம்.. ஆலோசனையில் முதல்வர்.. யார் பதவி பறிபோகும்?
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அமாவாசைக்கு அமாவாசை அமைச்சரவை மாற்றம் நடக்கும். டிவியில் பிளாஸ் நியூஸ் பார்த்துதான் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கே தெரியும். முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் இன்னும் சில வாரங்களில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக ஆட்சி 3 ஆண்டுகள் நிறைவு: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பதவியேற்று மே 7ஆம் தேதியுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. மகளிர் இலவச பேருந்து பயணம், 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இளைய தலைமுறை வாக்காளர்களை குறி வைத்து பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மத்தியில் திமுகவின் செல்வாக்கை வளர்க்கவும் புதிய புதிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
நிர்வாகிகள் மீது கோபம்: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தாலும் அரசியல் களத்தில் இன்னமும் அனல் நீங்கவில்லை. காரணம் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் வெளியாகும் முடிவை எதிர்பார்த்து பலரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். 40க்கு 40 என்று இலக்கு நிர்ணயத்து திமுக பணியாற்றினாலுல் பல இடங்களில் நிர்வாகிகள் களப்பணியாற்றுவதில் சுணக்கம் காட்டியது முதல்வரும், கட்சி தலைவருமான ஸ்டாலின் கவனத்திற்கு சென்றுள்ளது.
ஜூன் 4 ரிசல்ட்: தேர்தல் முடிந்த உடன் பணி செய்யாத நிர்வாகிகளை லெப்ட் அன்ட் ரைட் வாங்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதோடு தேர்தல் பிரசார களைப்பு தீர கொடைக்கானலுக்கும் சென்று திரும்பியிருக்கிறார். அடுத்த கட்ட ஆலோசனை எல்லாம் அமைச்சரவை மாற்றம் பற்றியதாகத்தான் இருக்கிறதாம். ஜூன் 4ஆம் தேதி ரிசல்ட் முடிந்த பிறகு அமைச்சரவை மாற்றம் கண்டிப்பாக இருக்கும் என கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை கூட்டத் தொடர்: சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற வேண்டும். அதற்காக ஜூன் முதல் வாரத்தில் சட்டசபை கூட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அமைச்சரவை மாற்றம் இருப்பதால் ஜூலையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தயாராகும் ஸ்டாலின்: 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு இன்னமும் சரியாக இரண்டு ஆண்டுகள் உள்ளன. மக்களவைத் தேர்தல் முடிந்த சூட்டோடு சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை இப்போதே தொடங்க சொல்லி விட்டாராம் முதல்வர் ஸ்டாலின். அமைச்சரவை மாற்றமும் சட்டசபை தேர்தல் பணிக்கான முன்னோட்டமாகவே இருக்கலாம். தமிழக மக்களின் மனதில் சாதனைகளை பதிய வைக்கும் வகையில் களப்பணியாற்றுபவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை மாற்றம்: ஜெயலலிதா ஆட்சி காலம் போல திமுக ஆட்சி காலத்தில் பெரிய அளவில் அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டதில்லை. இந்த முறை ஸ்டாலின் பதவியேற்ற பிறகு சில முறை அமைச்சர்களை மாற்றியுள்ளார். ஆட்சி முடிய இன்னும் இரண்டு ஆண்டு காலம் உள்ள நிலையில் மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்போகிறார் முதல்வர் ஸ்டாலின்.
எது எப்படியோ கோட்டை வட்டாரங்களில் நிகழப்போகும் புதிய அமைச்சரவை மாற்றம் பலரது தூக்கத்தை தொலையச் செய்துள்ளதாம். என்ன நடக்குமோ? யாருடைய பதவி பறிபோகுமோ என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் எழுந்துள்ளது.
What's Your Reaction?