தேர்தல் விதிமுறைகளை மீறிய திமுக… 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு… குமுதம் ரிப்போர்டர் செய்தி எதிரொலி…

தென்காசியில் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்ட பெண்களிடம் விதிமுறைகளை மீறி வாக்கு சேகரித்த திமுக வாகனம் தொடர்பான குமுதம் ரிப்போர்டர் யூடியூப் சேனல் வெளியிட்ட செய்தி எதிரொலியாக 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Apr 8, 2024 - 21:18
தேர்தல் விதிமுறைகளை மீறிய திமுக… 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு… குமுதம் ரிப்போர்டர் செய்தி எதிரொலி…

தென்காசியில் கடந்த 6ஆம் தேதி, 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாக்காளர்களுக்கான பிரமாண்ட விழிப்புணர்வு பேரணி உலக சாதனை நிகழ்வாக நடைபெற்றது. இதில், 500க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள், 7000க்கும் மேற்பட்ட பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பேரணியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

 

 புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணியானது, முக்கிய வீதிகள் வழியே 2 கிலோமீட்டர் சென்றபின் குத்துக்கல்வலசையில் நிறைவடைந்தது. இந்த பேரணி நடைபெறுவதன் காரணமாக வாகனங்கள் செல்வதற்காக மாற்று பாதையையும் போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர். 

 

அப்போது திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளும் வாகனம் ஒன்று பேரணியின் குறுக்கே அத்துமீறி நுழைந்து, நேர்மையான முறையில் வாக்கு செலுத்த வலியுறுத்தி  விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண்களிடம், திமுக பிரசார வாகனத்தில் இருந்த நபர், நானும் அரசு ஊழியர் தான் எனக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

 

 இதுகுறித்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக குமுதம் ரிப்போர்டர் யூடியூப் தளத்தில், தேர்தல் விதிமுறைகளை மீறுகிறதா? திமுக என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது. 

  

இதனையடுத்து, தேர்தல் பறக்கும் படை அலுவலர், தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow