மனுவுடன் வந்த மூதாட்டி... உடனே உதவ முன்வந்த விஜய் ரசிகர்...

Feb 19, 2024 - 16:04
Feb 19, 2024 - 16:10
மனுவுடன் வந்த மூதாட்டி... உடனே உதவ முன்வந்த விஜய் ரசிகர்...

உதவி கேட்டு வந்த மூதாட்டியின் மருத்துவ செலவை ஏற்றுக்கொண்ட விஜய் ரசிகருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் தலைமை நிர்வாகிகள் கூட்டம் பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (பிப்.19) நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து 150 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது, இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் இருந்து ரசிகர்கள் பனையூரில் திரண்டிருந்தனர். இந்த நிலையில், மூதாட்டி ஒருவர் கையில் மனுவுடன் ரசிகர் கூட்டத்துடன் நீண்ட நேரம் காத்து நின்றிருந்தார். அவரிடம் ரசிகர்கள் விசாரித்த போது, அந்த மூதாட்டி தனக்கு கண் பார்வையிலும், செவித்திறனிலும் குறைபாடு இருப்பதாகவும், அதற்கான மருத்துவ செலவிற்கு விஜய்யுடன் உதவி கேட்டு வந்துள்ளதாக கூறினார். 

இதைக் கேள்விப்பட்ட கோயம்புத்தூரில் இருந்து கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த தளபதி தங்கம் என்ற விஜய் ரசிகர் ஒருவர், மூதாட்டிக்கு உதவி செய்ய முன்வந்தார். ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், மூதாட்டியை அருகாமையில் இருக்கக்கூடிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அதற்கான சிகிச்சைகளையும், செவித்திறன் கருவியை வாங்குவதற்கான நிதி உதவியும் வழங்குவதாக அவரிடம் உறுதி அளித்தார். உதவி செய்த விஜய் ரசிகருக்கு மூதாட்டி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். விஜய் ரசிகர் தளபதி தங்கத்திற்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow