காவிரி நீர் விவகாரம்: அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்.. அடிபணிந்த கர்நாடகா..!

தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய காவிரி நீர் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தில், அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 12,000 கனஅடி நீரை திறந்துவிடுவதாக கர்நாடக அரசு உறுதியளித்துள்ளது.

Aug 17, 2026 - 18:00
காவிரி நீர் விவகாரம்: அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்.. அடிபணிந்த கர்நாடகா..!

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்குமுறை குழு பரிந்துரைத்த அளவைவிட கர்நாடகா குறைந்த அளவு நீரை திறந்துவிடுவதாக தமிழக அரசு மற்றும் திமுக தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் இன்று(ஆகஸ்ட் 17)  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.

விசாரணையின்போது கர்நாடகா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் 12,000 கனஅடி நீர் திறப்பதை உறுதி செய்வதாக தெரிவித்தார்.

கடுமையான நீர்ப்பற்றாக்குறை காரணமாக ஆரம்ப நாட்களில் நீர் திறப்பு சுமார் 6,000 கனஅடியாக குறைந்ததாகவும், நிலைமை சீராகி வருவதால் இனிவரும் நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவு நீர் திறக்கப்படும் என்றும் கர்நாடக அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் காவிரி நீர்வரத்து 6,500 கனஅடியில் இருந்து 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் 4,385 கனஅடியில் இருந்து 6,179 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 81.31 அடியாகவும், நீர் இருப்பு 43.27 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 2,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு நீர் திறப்பு தொடர்பான முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow