"புதிய தலைமைச் செயலகம் அவசியம்" - மாணிக்கம் தாகூர் விளக்கம் !

விஜய் தலைமையிலான கூட்டணி, பிரதமர் வேட்பாளர் சர்ச்சை, திமுக விமர்சனம் குறித்து மாணிக்கம் தாகூர் பகிர்ந்த பரபரப்பு அரசியல் தகவல்கள்!

Sep 20, 2026 - 20:00
"புதிய தலைமைச் செயலகம் அவசியம்" - மாணிக்கம் தாகூர் விளக்கம் !
Manickam Tagore Breaks Silence !

பிரதமர் வேட்பாளர் விஜய்' என்கிற கோஷம் த.வெ.க. - காங்கிரஸ் உறவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் த.வெ.க. தலைமையில் ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' அமைக்கப்பட்டு, அதில் காங்கிரஸும் உற்சாகமாக கை குலுக்கியிருக்கிறது. இந்த சூழலில், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரை சந்தித்து த.வெ.க. ஆட்சி, இடைத்தேர்தல் நிலவரம், எதிர்க்கட்சிகளின் விமர்சனம் என பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.

இடைத்தேர்தல் நிலவரம் எப்படி இருக்கிறது?

"கடந்த 25 ஆண்டுகளில் முதல்முறையாக ஆளுங்கட்சி பணம் கொடுக்காமல் நடைபெறும் இடைத்தேர்தலாக இது இருக்கும். ஓட்டுக்குப் பணம், கறி விருந்து, பரிசுப் பொருட்கள் என இடைத்தேர்தலுக்கு என்று இருந்த ஃபார்முலாவை இந்தத் தேர்தல் மாற்றும் சாமானியர்கள், நடுத்தர மக்களுக்கு தூரமாக இருந்த தேர்தல் அரசியலை விஜய் நெருக்கமாக்கியிருக்கிறார். நேர்மையான, ஊழவற்ற அரசியலுக்கு மக்கள் அங்கீகாரம் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது"

'பிரதமர் வேட்பாளர் விஜய்' என்ற கோஷத்தின் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக கூறப்படுகிறதே?

அப்படி ஒரு கோஷமே இல்லை. பா.ஜ.க. தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. த.வெ.சு. தலைமை இதற்கு ஏற்கெனவே முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. முதலமைச்சர் விஜய், 'எட்டு கோடி தமிழ் மக்களுக்காகத்தான் எனது வேலை' என்று சட்டமன்றத்திலேயே தெளிவாகக் கூறியுள்ளார். எங்களது கவனம் கூட்டணியைப் பலப்படுத்துவதில்தான் உள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள எங்கள் அமைச்சர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருகிறோம். 152 கல்லூரிகளுக்கான முதல்வர்கள் ஒரு பைசாகூட வாங்காமல் கவுன்சிலிங் மூலம் தேர்வு செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. கடந்த ஆட்சியில் இதற்காக ஒரு முதல்வருக்கு ரூ.25 லட்சம் வரை வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது."

முதலமைச்சரின் சட்டமன்றப் பதிலுரையின் உடல்மொழி குறித்து தி.மு.க. போராட்டம் செய்திருக்கிறதே?

"முதலமைச்சரின் ஸ்டைல் வேறு. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஒரு பெண்ணைப் பற்றி பேசியதை யாரும் ஏன் கண்டிக்கவில்லை? 'என் மனைவி, அம்மா. சகோதரி' என்று பேசிவிட்டால் மட்டும் போதுமா? மன்னிப்பு கேட்சு வேண்டாமா? தவறை உணராத எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை வைத்திருக்கிறோம். அவருடைய பேச்சை யாரும் சுண்டிக்கவில்லை. முதலமைச்சர் பேசுவதற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்தால், அதற்கு எதிர்வினை இருக்கத்தான் செய்யும்.

சட்டமன்றத்தில் சபாநாயகர் நியாயமாக நடந்துகொண்டுள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு 10 சதவிகிதம்கூட பேச வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால், தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு 29 மணி நேரமும், ஆளுங்கட்சிக்கு 12 மணி நேரமும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தை மக்கள் பார்க்கும் இடமாக மாற்றியிருக்கிறார்கள்."

மிசா குறித்து தமிழக அமைச்சர்களுக்கு புரிதல் இல்லை என்ற விமர்சனம் எழுகிறதே?

40 வயதுக்குக் கீழே உள்ள ஒரு தலைமுறைக்கு மிசா பற்றியும், எமர்ஜென்சி பற்றியும் தெரியாது. 'மிசாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்ற விவாதத்தை கிளப்பியதற்கான எதிர்வினைதான் இது. தி.மு.க.வின் அல்லறை சில்லறை ஐ.டி. விங்தான் அக்கட்சியை கீழே கொண்டுசெல்லும்.

தி.மு.கவின் தவறான செயல்களுக்கு அக்கட்சியின் ஐடி விங்தான் காரணமாக இருக்கிறது."

த.வெ.க. வெற்றியை தி.மு.க. இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறீர்களா?

"ஆம். அது முழுக்க முழுக்க உண்மை தி.மு.க செயற்குழுவில் பேசிய ஸ்டாலின், 'த.வெ.க.வில் நிர்வாகக் கட்டமைப்பு இல்லை, மக்களுக்கான போராட்டம் எதுவும் அவர்கள் நடத்தியதில்லை. ஆனால் வெற்றி பெற்றுவிட்டார்கள்' என்று கூறியிருக்கிறார். இது திமிர்! சம்பாதித்த பணத்தின் அகங்காரம். பணத்தை வைத்து தமிழ்நாட்டில் எல்லாவற்றையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளது."

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே?

"தமிழகத்திற்கு அடுத்த 100 ஆண்டுகளுக்குத் தேவையான நவீன தலைமைச் செயலகம் வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் தலைமைச் செயலகத்தை மாற்ற முயற்சித்து, கட்டிய பிறகு அதை மருத்துவமனையாக மாற்றியிருக்கிறார்கள். அதற்குத் தேவையான இடம் அரசு இடமாகத்தான் இருக்க வேண்டும். தனியார் இடத்தை எடுக்க முடியாது. தமிழக வளர்ச்சியை அரசியலுக்காகத் தடுக்கக் கூடாது. இவ்விவகாரத்தில் அரசு சரியாகச் செயல்படும் என்று நம்புகிறோம்."

தென் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை குறைக்க, விஜய்யை பா.ஜ.க. தூண்டி விடுவதாகவும் கூறப்படுகிறதே?

"தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற பல்வேறு முறைகளைக் கையாண்டிருக்கிறது. இது பிரித்தாளும் சூழ்ச்சியாகக்கூட இருக்கலாம். ஆனால், இந்தக் கூட்டணி பிரியப்போவது இல்லை. அது நடக்காது. பகல் கனவு காண வேண்டாம்."

சமீபத்தில் முதல்வர் விஜய்யை எம்.பி. பிரவீண் சக்ரவர்த்தியுடன் சேர்ந்து நீங்கள் சந்தித்தது பிரதமர் வேட்பாளர் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகத்தானா?

நாடாளுமன்றக் குழு சார்பாக மட்டுமே அந்தச் சந்திப்பு நடைபெற்றது. எனது கனவுத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டார். பிரதமர் வேட்பாளர் குறித்து எதுவும் அவர் பேசவில்லை. நாங்களும் அதுபற்றி எதுவும் பேசவில்லை. எங்களது நோக்கம் கூட்டணியை வலுப்படுத்துவது மட்டும்தான்."

- குமுதம் செய்திகளுக்காக அ. ராமசந்திரன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow