ஐபிஎல் 2025: எந்த அணிக்கு ப்ளே-ஆப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது? CSK அவ்ளோதானா?
18-வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி கொல்கத்தா மைதானத்தில் தொடங்கியது. லீக் போட்டிகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் எந்த 4 அணிகள் ப்ளே-ஆப் செல்லும் என்கிற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசன் தொடங்கிய போது ஆரம்பத்தில் 5 முறை ஐபிஎல் சாம்பியன்களான மும்பை மற்றும் சென்னை அணி படுமோசமாக சொதப்பியது. மும்பை அணி தனது முதல் 5 போட்டிகளில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே வென்றது. சென்னை அணி தான் விளையாடிய முதல் 6 போட்டிகளில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. என்னடா இது ? என ரசிகர்கள் உச்சுக்கொட்டிய நிலையில் அட்டகாசமான பார்முக்கு திரும்பியது மும்பை அணி.
தொட்டதெல்லாம் ஹிட்டு என்பது போல் மும்பை அணி தான் விளையாடிய கடைசி 5 போட்டிகளை வென்று ப்ளே-ஆப் கனவை நோக்கி ஒரு படி எட்டு வைத்துள்ளது. ஆனால் சென்னை அணியின் நிலைமை தான் ரொம்ப பரிதாபமாக உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2-ல் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மீதமுள்ள 5 போட்டிகளில் வென்றால் கூட, மற்ற அணிகளின் ரன் ரேட் பொறுத்து தான் ப்ளே-ஆப் சுற்றுக்குள் நுழைய முடியும் என்கிற நிலைமை சென்னை அணிக்கு வந்துள்ளது.
மிரட்டிவிடும் பெங்களூரு அணி:
எப்போதும் ப்ளே-ஆப் சுற்றுக்குள் நுழைய கால்குலேட்டர் கையுமா சுத்தும் பெங்களூரு அணி இந்த ஐபிஎல் தொடர் தொடங்கியது முதலே எதிரணிகளை பந்தாடி வருகிறது. ”ஈ சாலே கப் நமதே” என்கிற கனவு இந்த ஆண்டு நிறைவேறிவிடும் என்கிற அதீத நம்பிக்கை பெங்களூரு ரசிகர்களுக்கு வந்துள்ளது. இதுவரை பெங்களூரு அணி விளையாடிய 10 போட்டிகளில் 7-ல் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலுள்ளது. இதில் ஹைலைட் விஷயம் என்னவென்றால், பெங்களூரு அணி வென்ற 7 போட்டிகளில் 6 போட்டியானது எதிரணியின் சொந்த மைதானங்களில் நடைப்பெற்றது.
குஜராத் அணி தான் விளையாடிய 8 போட்டிகளில் 2-ல் மட்டுமே தோல்வியுற்றுள்ளது. மீதமுள்ள 6 போட்டிகளில் 2 அல்லது 3 போட்டிகள் வென்றாலே எளிதில் ப்ளே-ஆப் சுற்றுக்குள் குஜராத் அணி நுழைந்துவிடும். நேற்று (27.04.2025) நடைப்பெற்று முடிந்த லீக் போட்டியின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்கள் முறையே பெங்களூரு,குஜராத், மும்பை , டெல்லி அணிகள் உள்ளன.
அடுத்த 6 இடங்கள் முறையே பஞ்சாப், லக்னோ, கொல்கத்தா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான், சென்னை அணிகள் உள்ளன. லீக் போட்டியின் நிறைவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணியே ப்ளே-ஆப் சுற்றுக்கு நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி ப்ளே-ஆப் சுற்றுக்குள் நுழைய எந்த அணிக்கு எவ்வளவு சதவீத வாய்ப்புள்ளது என்பதனை காணலாம்.
- RCB - 90%.
GT - 87%.
DC - 75%.
MI - 64%.
PBKS - 58%.
LSG - 19%.
KKR - 6%.
SRH - 1%.
RR ~ 0.1%.
CSK ~ 0.03%.
What's Your Reaction?






