தீபிகா,வயது 20-மாலைமதி
சித்தப்பா சங்கரனிடம் தனது காதலை ஒப்புக்கொள்ளும் தீபிகாவுக்கு, எந்த எதிர்ப்பும் இல்லாமல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் அவரது அன்பும் புரிதலும் உணர்வுபூர்வமாக வெளிப்படுகிறது.
தீபிகா, வயது 20.
"தேங்க்யூ யுனிவர்ஸ்..”
தரையைத் தொட்டு எழுந்து நின்றார் சங்கரன். கால் தரையில் படும்போது மீண்டும் ஒருமுறை 'தேங்க்யூ யுனிவர்ஸ்' என்றார். 'இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்' என்று நினைக்கும்போதே மனதிற்குள் ஒரு உற்சாகம் பிறந்தது. ஜன்னல் திரைச்சீலைகளை விலக்கிக் கதவுகளைத் திறந்து வைக்க, கண்ணாடி ஷட்டர் ஒரு சின்ன சத்தத்தோடு திறந்துகொண்டது. நேர் எதிரில் மலைகளுக்கு நடுவில் சூரியன் தெரிந்தது. அதிகாலையில் சூரியன் தெரியும்போதெல்லாம் அந்த நாள் ஏதோ ஒரு விதத்தில் சிறப்பானதாக அமைந்துவிடும்.
இதைச் சங்கரன் ஒவ்வொரு முறையும் அனுபவித்திருக்கிறார். மழை, பனி இருக்கும் காலங்களில் அவ்வளவாகச் சூரியன் தெரியாது. நல்ல வெயில் காலத்தில் தெரியும். முதல் மாடி என்பதால் எதிரில் மலைகள் தெரிந்தது. இன்னும் சில வருடங்களில் இங்கு மேலும் மேலும் கட்டடங்கள் முளைக்க ஆரம்பித்து, மலையும் மறைந்துவிடும். சின்னதாக ஒரு ஏக்கம் எழுந்தது அவர் மனதில். அவர் சிறுவனாக இருந்தபோது பார்த்த மருதமலை வேறு; இப்போது இருப்பது வேறு.
சிறு வயதில் காலையில் எழுந்ததும் வேகமாக மாடிக்கு ஓடி வருவார். அப்போது இந்த முதல் மாடி கட்டப்படவில்லை. இங்கு நின்று தொலைவில் தெரியும் மருதமலையைப் பார்த்து முருகா, முருகா என்று கூவிவிட்டு, அதன் பிறகுதான் பள்ளிக்குக் கிளம்பிச் செல்வார். அதன்பிறகு, அப்பா கீழே தன்னுடைய அலுவலகத்தை வைத்துக் கொண்டு, மாடியில் கட்டினார். பெரியண்ணாவுக்குத் திருமணமானது. தீபிகா பிறந்தாள். அவளையும் தூக்கிக்கொண்டு மேலே இருக்கும் மொட்டை மாடிக்கு வந்து விடுவார்.
அப்போது பக்கத்தில் வீடுகள் வர ஆரம்பித்துவிட்டன என்றாலும், இன்னும் மலையை மறைக்கவில்லை. "மறைச்சா என்ன செய்வே?" "மேலே இன்னொரு மாடி கட்ட வேண்டியதுதான்!" "அதுவரை நீ இருப்பியா?" உள் மனது கேள்வி கேட்டது. யார் இருப்பார்கள், யார் போவார்கள் என்று யார் சொல்ல முடியும்?
இன்று சிறு வயதுக்காரர்களே திடீர் திடீரென்று மாரடைப்பு என்று விழுகிறார்கள். எதிர் வீட்டு மாமா தொண்ணூற்று ஏழு வயதுக்கு இன்னும் நன்றாக நடந்து போகிறார். பல் விழவில்லை. கண்ணாடி இல்லை. எல்லாமே இறைவன் போட்ட கணக்குதான். அவன் மேலிருந்து என்ன எழுதுகிறானோ, அதன்படிதான் அனைத்தும் நடக்கும். நினைத்தவர், கூடவே 'ஏன் இன்று காலங்காலையில் தத்துவம்? என்றும் நினைத்துக் கொண்டார்.
பாத்ரூமுக்குள் போய் பல் தேய்த்து, கை, கால் கழுவிக்கொண்டு வெளியில் வந்தார். தீபிகா ரூம் சார்த்தியிருந்தது. மெதுவாக வாசல் கதவைத் திறந்து, பால்கனியில் நின்றார். அதிகாலைக் காற்று அம்மாவின் தழுவலாய் இருந்தது. ஆதூரம், கனிவு. "என்னப்பா வேணும்?" என்று கேட்கும் ஒரு அன்பான குரலாய் அந்தக் காற்று இருந்தது. கண் மூடி, அதை அனுபவித்தார் பால்கனி கைப்பிடியை ஒட்டி இரண்டு பக்கமும் வீடுகள் இருந்தன. அந்தக் கைப்பிடி வழிதான் பரிமாற்றங்கள் நடக்கும். பதார்த்தங்கள், பேப்பர் என்று இங்கிருந்து அங்கு போகும்; அங்கிருந்து இங்கு வரும் தீபிகா, அம்மா அப்பா இல்லாதவள் என்று அக்கம்பக்கம் வீடுகள் அனைத்தும் அவளிடம் பிரியமாக இருக்கும். அவளுக்கு வேண்டியது எல்லாம் கொண்டு வந்து கொடுக்கும்.
'ஏன் அவளுக்கு யாரும் இல்லை? நான் இருக்கிறேன் சித்தப்பா! தனக்குத்தானே கூறிக்கொண்டார் சங்கரன். தீபிகாவுக்கு யாரும் இல்லை என்று சொல்வதை அவரால் தாங்க முடியாது. மூன்று வயதுக் குழந்தையாக அவளைத் அவர் கையில் ஒப்படைத்துவிட்டு அண்ணாவும் அண்ணியும் ஒரு விபத்தில் இறந்து போனார்கள்.
அதன் பிறகு, தீபிகாவின் பத்து வயது வரையில் அப்பா இருந்தார். அவரும் ஒரு நாள் 'போயிட்டு வரேன்' என்று சொல்லிவிட்டே போனார். இப்போது பாட்டிதான் அம்மாவாக இருக்கிறாள். சங்கரனுக்கு இரண்டு குழந்தைகள். எண்பது வயதான அம்மா. இருபது வயதான தீபிகா.
தனக்கு? எப்போதும் எழும் கேள்விதான். யார் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தப் பிரபஞ்சம் தீர்மானிக்கும் என்று நினைத்துக் கொண்டார் சங்கரன். மீண்டும் உள்ளே சென்று காபி போட்டு, தீபிகாவுக்கு பிளாஸ்க்கில் ஊற்றி வைத்தார். அம்மாவுக்கு ஒரு காபி கொண்டு போய், கதவைத் தட்டினார். அம்மாவின் ரூம் கதவு எப்போதும் திறந்துதான் இருக்கும். அதைச் சார்த்தக்கூடாது என்பது சங்கரனின் உத்தரவு. அம்மா எழுந்திருந்தாள். எப்பொழுதும் தூங்கியெழுந்ததுமே முதல் வேலையாகக் குளித்து விடுவாள். குளித்து, நரைத்த முடியைக் கொண்டை போட்டு, பளிச்சென்று பச்சை நிறப் புடவையுடன் முகம் முழுவதும் சிரிப்புடன் வெளியில் வந்தாள் அம்மா.
"அதுக்குள்ள போட்டுட்டியா, நான் வருவேன்ல?" "நல்ல காபி குடிக்கணும்னு இருந்தது.” “ஏண்டா, இத்தனை நாளா நீ குடிச்சது என்ன காபி?" "ஏதோ காபின்னு ஒண்ணு குடிச்சேன். இன்னைக்கும் பால் நல்லா திக்கா இருந்ததா, உனக்கும் ஒரு காபி!" "சொல்லுவடா.!" அம்மா சிரித்தபடி காபியை வாங்கிக் கொண்டார். "சங்கரன், போலாமா?" என்றபடி பக்கத்து வீட்டு டாக்டர் ராஜன் வந்துவிட்டார். இருவரும் சேர்ந்துதான் வாக்கிங் போவார்கள். "காபியா?" என்றபடி, அம்மாவின் கையில் இருந்த காபியைத் தான் பிடுங்கிக் கொண்டார். அம்மா சிரித்தபடியே விட்டுக் கொடுத்தாள் இது வழக்கமாக நடக்கும் சம்பவம்தான். டாக்டரும் அந்த வீட்டில் ஒருவர். அவரும் சங்கரனும் ஒன்றாகப் படித்தவர்கள். அதன் பிறகு சங்கரன் பல் டாக்டருக்கும், அவர் பொது மருத்துவத்திற்கும் சென்றார்கள்.
"உன்கிட்ட பேசவே பயமா இருக்கு" என்பார் டாக்டர் ராஜன் . “ஏண்டா?" "ஏதாவது பேசினா பல்லைத் தட்டிடுவே!" "உனக்குத்தான் தட்ட வேண்டிய அவசியமே இல்லையே. முன்வரிசைப் பல்லே காணோமே!" என்பார் சங்கரன். இப்போது டாக்டருக்குப் பல் கட்டுவதற்கு பல் செட் ஆர்டர் செய்திருக்கிறது. "எப்படா பல் செட் வரும்?" "இன்னைக்கு வந்துரும்." "ஓகே." "ஒரு வாரம் ரெஸ்ட் தரணும் பல்லுக்கு. ஆபரேஷன் எதுவும் இல்லையே?" "முடிஞ்சது." "நேத்து ஏதோ சீரியஸ் ஆபரேஷன்னு சொன்னியே?" "ஆமாப்பா. ரொம்பப் பயமாத்தான் இருந்தது. ஆனா, கண்ண மூடிட்டு பண்ணிட்டேன்." "பேஷன்ட் எப்படி இருக்கார்?" "கண்ணை மூடிட்டான்!"
"அடப்பாவி! இதென்ன, டாக்டர் ஜோக் மாதிரி சொல்றே?" "என்ன பண்ணச் சொல்றே, ஆபரேஷன் டேபிள்லயே மாரடைப்பு!" "நீ ஆபரேஷன் பண்ணப் போறேங்கிற பயத்துல வந்திருக்கும்!" “இருக்கலாம். வா, முதல்ல வாக்கிங் போயிட்டு வரலாம். இல்லன்னா அந்த முக்குக் கடையில வடை தீர்ந்து போயிடும்." "வடை திங்கிறதுக்கா வாக்கிங்?" "வாழுறதே அதுக்குத்தானே! அப்புறம் வட போச்சேன்னு வருத்தப்படக் கூடாதில்லே?" டாக்டர் நகர, சிரித்தபடி தொடர்ந்தார் சங்கரன்.
காலை 6 மணிக்கு வெயில் வந்திருந்தது. சித்திரை மாதம் சிறிது வெயில் அதிகமாகத்தான் இருக்கும் என்றாலும், கத்தரி வெயில் ஆரம்பிக்கும்போது இங்கு மழை பெய்யும் என்பார்கள். இன்னும் ஒரு வாரம் இருந்தது. மழை பெய்தால் புழுக்கம் கொஞ்சம் தீரும் என்றபடி மெதுவாக நடந்தார்கள். நடக்க நடக்க, இன்னும் நான்கு பேர் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். மெதுவாகப் பல விஷயங்களை பேசியபடி நடந்தார்கள். "ஏம்பா, தீபிகாவுக்கு இப்ப என்ன வயசு?" "இருபது முடியப் போகுது!"
"டிகிரி முடிச்சாச்சா?" "ஆச்சு. என்னவோ மேல படிக்கணும்னு சொல்றா. பார்க்கலாம்." “ஒரு டிகிரி வாங்கிப் பிரயோஜனம் இல்லை. அது எல்.கே.ஜி மாதிரி. மேல இரண்டாவது டிகிரியும் வேண்டும்." "தீபிகா என்ன படிக்கிறா?" "அவளுக்கு சி.ஏ பண்ணணும்னு ஆசை. அதனால பி.காம் சேர்ந்தா. இன்டர் முடிச்சிட்டா. இனி மெயின் போகணும். யாரானும் ஒரு நல்ல ஆடிட்டரிடம் அவளை ட்ரெய்னிங் சேர்த்து விடணும்.”
"நோ பிராப்ளம். என்னுடைய ஆடிட்டர் இருக்கார். அவரிடமே சேர்த்துவிடலாம்!" என்றார் கோவிந்தன். "எங்க ஆடிட்டரே இருக்காரு" என்றார் டாக்டர். "ஆனா, அவர் அடிக்கடி தன் பெண்ணைப் பார்ப்பதற்காக யு.எஸ் போய்விடுவார். தீபிகாவுக்கும் அதில் விருப்பமில்லை. பழகின ஆடிட்டரைவிட, வேறு ஒரு விஷயம் தெரிந்த ஆடிட்டரிடம் போக வேண்டும் என்கிறாள். பார்க்கலாம்" என்றார் சங்கரன். "கல்யாணத்தைப் பண்ணிடுங்க!" "பண்ணணும். அம்மாவுக்குத் தள்ளாமை ஆயிடுச்சு. அவ நல்ல ஆரோக்கியமாக இருக்கும்போது பேத்திக்குக் கல்யாணம் செஞ்சுட்டா அவளுக்கும் ஒரு திருப்தி இருக்கும்." "ஆமாம். அதுக்குப் பிறகு உங்களுக்குன்னு ஒரு துணை தேடிக் கொள்ளுங்கள், சங்கர்!" தனக்கா?! சிரிப்பு வந்தது. வேண்டாம் என்று ஒதுங்கி இருபது வருடம் ஆகிவிட்டது. இனி மீண்டும் இந்த மனதிற்குள் பூ மலருமா? சான்சே இல்லை என்றுதான் தோன்றியது.
மௌனமாகச் சிரித்தபடி மெதுவாக நடந்தார் சங்கரன். மருதமலை அடிவாரம் வரை வந்துவிட்டு, அங்கு வெயிலுக்கு ஆளுக்கு ஒரு இளநீர் குடித்தார்கள். தர்பூசணி வாங்கிக்கொண்டு மெதுவாக வீட்டிற்கு வந்தபோது, அம்மா டிபன் வேலையில் இறங்கியிருந்தாள். “ஏம்மா நீ பண்ற? அதான் சமையல்காரம்மா வந்துருவாங்கல்ல?"
"வரட்டுண்டா. அதுக்குள்ள எனக்கு என்னவோ வாய்க்கு ருசியா திங்கணும் போல இருந்தது. அதான் ஒரு சட்னி அரைச்சேன்." "சரி, தீபிகா எங்கே?" "அவ இன்னும் எழுந்துக்கல. காலேஜ் லீவுதானே. தூங்கட்டும்." "பாத்தியா அவள?" "உள் கதவைத் திறந்து பார்த்தேன். குப்புறப் படுத்துண்டு இருக்கா."
சங்கரனுக்கு ஏதோ ஒரு சின்ன சந்தேகம் தோன்றியது. இப்படிப் படுத்துக் கிடப்பவள் அல்ல தீபிகா. எனவே, மெதுவாக அவள் கதவைச் சத்தம் இல்லாமல் திறந்து, உள்ளே நுழைந்தார்.
குப்புறப் படுத்தபடி இருந்த தீபிகாவின் முதுகு மட்டும் குலுங்கியது. மெதுவாக அருகில் போய் 'பார்பிக் குட்டி' என்று அழைத்ததும், விருட்டென்று எழுந்து உட்கார்ந்த தீபிகாவின் கண்கள் சிவந்து இருந்தன. முகம் அழுதிருப்பதைக் காட்டியது. சங்கரன் அவள் முகத்தை உற்றுப் பார்த்ததும், தலையைக் குனிந்து கொண்டாள் தீபிகா.
"எதுக்கு அழுகை?" "என்ன காதலா?" "ஆமாம்" என்று தலையசைத்தாள் தீபிகா. "ஓகே. அவங்க வீட்ல பேசி கல்யாணத்தை முடிச்சிடலாம். போய் முகத்தைக் கழுவிட்டு வா!" என்ற சங்கரனின் கழுத்தை அப்படியே கட்டிக் கொண்டாள் தீபிகா.
What's Your Reaction?