”விஜய்மீது ஏன் FIR போடல? – திமுக செஞ்ச பெரிய தப்பு அதுதான்..” – கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்புக்கு ஏற்பட்ட சட்ட ரீதியான பின்னடைவு தற்போது அரசியல் அரங்கில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அவர்களுக்கான அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கவும் முதலமைச்சர் விஜய் வருகின்ற ஜூலை 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் கரூர் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த பயணத்திற்கு தடை கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், "முதலமைச்சர் விஜய் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக எந்த ஆவணத்திலும் குறிப்பிடப்படவில்லை. உயிரிழந்தோரின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பது எவ்வாறு சாட்சிகளை பாதிக்கும் செயலாக கருதப்படும்?" என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், மனுவை திரும்பப் பெறாவிட்டால் அதை தள்ளுபடி செய்ய நேரிடும் என்று நீதிமன்றம் தெரிவித்த நிலையில், திமுக தரப்பு தனது மனுவை வாபஸ் பெற்றது. நீதிமன்றத்தின் இந்தக் கருத்து அரசியல் ரீதியாக திமுகவுக்கு சிக்கலான சூழலை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கரூர் சம்பவம் நடைபெற்ற உடனேயே விஜய் மீது வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது என்ற கருத்து கட்சியின் சில மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மத்தியில் அப்போதே நிலவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உளவுத்துறையும் அத்தகைய கருத்துகளையே அப்போதைய முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினிடம் கூறியதாகவும், ஆனால் அப்படி செய்தால் அது அனுதாப அலையாக மாறவும் வாய்ப்புகள் உள்ளதென கூறி விஜய் மீது எஃப்.ஐ.ஆர் போடாமல் கோட்டைவிட்டது என்பதே அரசியல் விமர்சகர்கள் மட்டுமல்ல, உடன்பிறப்புகளின் கருத்தாகவும் இருக்கிறது.
விஜய் மீது எஃப்.ஐ.ஆர் போடாமல், அந்த சமயத்தில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசாரணை ஆணையத்தின் அறிக்கையை எதிர்பார்த்து அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்ற அணுகுமுறையை பின்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு, அப்போது எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகள் குறித்து மீண்டும் விவாதங்களை தூண்டியுள்ளது. சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் இந்த விவகாரம் தற்போது தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
What's Your Reaction?