உடல் நலம் தரும் அதிசய அம்மன் கோயில்... ஜூலை 5-ல் மகா கும்பாபிஷேகம்!

ஓவ்வொருவருக்கும் எத்தனை எத்தனையோ வேண்டுதல் தெய்வங்களிடம் அவை ஈடேறியதும் அவர்கள் நன்றிக்கடனாகச் செலுத்தும் காணிக்கைகளும், கைங்கரியங்களும் வெவ்வேறுவிதம். அந்த வகையில் வித்தியாசமான காணிக்கை செலுத்தும் திருத்தலம்,பாப்பாக்குடி.

Jul 3, 2026 - 10:30
உடல் நலம் தரும் அதிசய அம்மன் கோயில்... ஜூலை 5-ல் மகா கும்பாபிஷேகம்!

தாமிரபரணி பாய்ந்தோடி வளப்படுத்தும் புராதனப் பெருமை மிக்க இத்தலத்தில், பக்தர்கள் தங்கள் உடல் உபாதைகள் நீங்கி நலம்பெற வேண்டுகிறார்கள்.
அது நிறைவேறியதும், முழு உருவ பொம்மைகளை காணிக்கையாகச் செலுத்தி வருவது வழக்கமாக உள்ளது.

பாண்டியர் ஆட்சிக் காலத்தில் முள்ளி நாடு என்ற உள்நாட்டுப் பிரிவில் இப்பகுதி அடங்கியிருந்தது. அவ்வேளையில், நால்வகை வேதங்களைக் கற்றுணர்ந்த அந்தணர்களே இவ்வூர் நிர்வாகத்துடன் கோயில் நிர்வாகத்தையும் கவனித்து வந்தனர். எனவே, இப்பகுதி, பார்ப்பான் குடி என வழங்கப்பட்டு, அது மருவி, இன்றைக்கு பாப்பாக்குடி என அழைக்கப்படுகிறது.

இங்கு ஊரின் காவல் தெய்வமாக ஊருக்கு வடக்கே நெல் வயல்களுக்கு நடுவே அருள்மிகு வடக்குவாச் செல்வி அம்மன் கோயில் கொண்டிருக்கிறாள். கி.பி. 1617ஆம் நூற்றாண்டு வாக்கில் கற்றளியாக எழுப்பப்பட்ட இக்கோயில் தொடக்கத்தில் மூலக்கோயிலாக கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவை மட்டுமே இருந்தன. சில நூற்றாண்டுகள் கழித்து கல் கட்டுமானமாக மகா மண்டபம் சுட்டப்பட்டது.

ஒரு கட்டத்தில் மகா மண்டபத்தில் சிதைவு ஏற்பட்டது. இதனால் இத்தலத்தில் மராமத்து மற்றும் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. அனைத்தும் சீராக புனரமைப்பு செய்யப்பட்டு, வரும் 05.07.2026, ஞாயிற்றுக்கிழமை (ஆனி மாதம் 21ஆம் நாள்) மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

நாலாபுறமும் திருமதில் சூழ சாலக்கோபுர வாசலுடன் கோயில் அமைந்துள்ளது. தல விருட்சமான அரசமரம், கோயிலுக்கு எதிரே ஓங்கி உயர்ந்து வளர்ந்து நிற்கிறது. திருமணத்தடை நீங்கிட, சந்தான பாக்கியம் கிடைத்திட, பூரண உடல் நலம் பெற்றிட வேண்டிடும் பக்தர்கள் பரிகாரங்களுக்காக நேர்த்திக்கடனாக உருவ பொம்மைகள், கட்டில், வளையல் போன்றவற்றைக் கொண்டுவந்து இந்த மரத்தினடியில் வைத்துச் செல் கின்றனர்.

மகா மண்டபத்தில் பலிபீடம் மற்றும் வேதாளம் உள்ளது. அர்த்த மண்டப வாசலில் ஆஞ்சநேயர், துவாரபாலகர், துவாரபாலகி உள்ளனர். நிலை வாசல் விதானத்தில் புடைப்புச் சிற்பமாக, ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம் யுத்தகளத்திற்கு அணிவகுத்துச் செல்லும் போர் வீரர்கள் வடிவம் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது.
கருவறையில் பீடத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் வடக்குவாச் செல்வி அம்மன் எட்டுக் கரங்களுடன் கருணாம்பிகையாக அருள்பாலிக்கிறாள். வலது காலை மடக்கி, இடது காலை மகிஷாசுரன் தலை மீது வைத்து அழுத்தியபடி தர்மதேவதையாகக் காட்சி தருகிறாள். கரங்களில் சூலாயுதம், சங்கு, சக்கரம், மணி, கேடயம், உடுக்கை, நாகர், குங்குமச்சிமிழ் ஆகியவற்றைத் தாங்கியிருக்கிறாள். இந்த அம்மனை நம்பிக்கையோடு நாடி வந்து பல்வேறு கோரிக்கைகளை நாளும் வைத்து வணங்கிச் செல்கிறார்கள் பக்தர்கள்.

உள்சுற்றில் கால பைரவர், அரசமரத்தடி விநாயகர், கருப்பன், நாகர் சன்னதிகள் உள்ளன. தினமும் இருகால பூஜை நடைபெறுகிறது. சித்திரை தமிழ் வருடப்பிறப்பன்று வருஷாபிஷேகம் கொண்டாடப்படுகிறது. மேலும், ஆடி முதல் செவ்வாயன்று முகூர்த்தக்கால் நடுதல், இரண்டாம் செவ்வாய் கொடை, மூன்றாம் செவ்வாய் எட்டாம் பூஜை ஆகியவை இங்கே நடைபெறும் விசேஷங்கள்.


5.07.2026 அன்று நடைபெற உள்ள குடமுழுக்குத் திருவிழாவில் இயன்றால் கலந்துகொள்ளுங்கள். அல்லது மண்டலபூஜை நாளுக்குள் சென்று வணங்குங்கள். என்று நீங்கள் சென்று செய்து காத்திடுவாள், கும்பிட்டாலும் நன்றே வடக்குவாச் செல்வியம்மன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow