Kottukkaali Review: “தமிழ் சினிமாவில் இது தரமான செய்கை..” சூரியின் கொட்டுக்காளி டிவிட்டர் விமர்சனம்

பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் இன்று வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் பாலா பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Aug 23, 2024 - 17:44
Kottukkaali Review: “தமிழ் சினிமாவில் இது தரமான செய்கை..” சூரியின் கொட்டுக்காளி டிவிட்டர் விமர்சனம்
கொட்டுக்காளி படத்தை பாராட்டிய இயக்குநர் பாலா

சென்னை: காமெடியனாக நடித்து வந்த சூரி, விடுதலை படத்தில் இருந்து ஹீரோ ரூட்டுக்கு மாறிவிட்டார். விடுதலை, கருடன் என அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களில் நடித்த சூரி, கொட்டுக்காளி மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்தப் படத்தை பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார். இன்று வெளியான கொட்டுக்காளி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இயக்குநர் பாலாவும் படத்தை பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.   

அதில், “நம்முடைய தமிழ்த் திரைப்படத்துறையில் இருந்து உலகம் வியக்கும் கலைஞர்கள் வந்துகொண்டே இருப்பார்கள் என்பதற்கு முக்கியமான சான்றுகளில் ஒன்று, இந்தக் கொட்டுக்காளி. ஆழமான இக்கதையை எளிமையாகவும் வலிமையாகவும் எடுக்க முடியும் என்று களமாடி, ஓர் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார் இயக்குநர் வினோத்ராஜ். குறிப்பாக, சூரி தனது கதாபாத்திரத்தை உணர்ந்து, ஆர்ப்பாட்டாமும் அமைதியும் ஒருசேர இணைந்த நடிப்பை வெளிப்படுத்தி, ஒரு நடிகராகத் திரையுலகில் ஆழச்சுவடு பதித்து தாண்டவமாடியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

படத்தின் தலைப்பிற்கே நியாயம் சேர்க்கும் வகையில், மிக அழுத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார் நாயகி அன்னா பென். படத்தில் நடித்திருக்கும் அனைவருமே, தாங்களும் ஒரு முக்கிய கதாப்பாத்திரம் தான் என்று சவால் விட்டுள்ளனர். காட்சியை வழி நடத்திச் சென்ற ஒளிப்பதிவாளர் சக்திவேல் மிகவும் போற்றுதலுக்குரியவர். சிவகார்த்திகேயனுக்கு வினோத்ராஜ் சார்பாக எனது நன்றிகள். சூரி, வினோத்ராஜ் போற்றப்பட வேண்டிய கலைஞர்கள் மட்டுமல்ல. கை கூப்பி வணங்கப்பட வேண்டியவர்கள். கொடுக்காளி படக்குழு அனைவரும் உயர்ந்து நிற்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் பாலாவின் இந்த அறிக்கையை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள நடிகர் சூரி, “இயக்குநர் அண்ணன் பாலாவின் வாழ்த்து! எங்களுக்கு இதுவரை கிடைத்த மிகச்சிறந்த விருதுகளில் இதுவும் ஒன்று!” என பதிவிட்டுள்ளார். முன்னதாக வாழை படத்தை பார்த்துவிட்டு கண் கலங்கிய பாலா, இயக்குநர் மாரிசெல்வராஜ்ஜை கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்துத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது கொட்டுக்காளி படத்தையும் இயக்குநர் பாலா பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow