திருநாவுக்கரசர் மருமகளாகும் நடிகை மேகா ஆகாஷ்.. திருவோண திருநாளில் திருமணம்.. விறுவிறு ஏற்பாடுகள்
நடிகை மேகா ஆகாஷுக்கு அவரது நீண்ட நாள் காதலரான சாய் விஷ்ணு என்பவருக்கும் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி ஆவணி திருவோணத்தில் திருமணம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் வீட்டிற்கு மருமகளாகிறார் மேகா ஆகாஷ்.
நடிகை மேகா ஆகாஷ் நீண்டநாட்களாக சாய் விஷ்ணு என்பவரை காதலித்து வந்தார். தன்னுடைய காதலைப் பற்றி வெளியே சொல்லாமல் ரகசியம் காத்து வந்த அவர், முதல் முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதை புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்பியுமான திருநாவுக்கரசர் வீட்டிற்கு மருமகளாகிறார் நடிகை மேகா ஆகாஷ். அனைவரும் குடும்பத்தோடு திருமணத்திற்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் திருநாவுக்கரசர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் மேகா ஆகாஷ். தமிழில் ரஜினிகாந்த நடித்த ‘பேட்ட’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ’வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’, ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தார். தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் அண்மையில் வெளியான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடித்திருந்தார்.
தமிழ் தவிர்த்து தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் மேகா ஆகாஷும், தமிழகத்தை சேர்ந்த பிரபல அரசியல்வாதியின் மகனும் காதலிக்கிறார்கள் என கடந்த ஓராண்டு காலமாக பேசப்பட்டது. ஆனால் அந்த காதலர் யார் என தெரியாமல் ரசிகர்கள் குழம்பினார்கள்.
என்னுடை ‘விஷ்’ உண்மையாகிவிட்டது. இனி என்றென்றும் காதல், சிரிப்பு, மகிழ்ச்சி. என் வாழ்வின் காதலுடன் எனக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார். திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் மேகா ஆகாஷுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மேகா. அதில் தன் வருங்கால கணவரான சாய் விஷ்ணுவின் இன்ஸ்டா கணக்கை மென்ஷன் செய்திருக்கிறார். அதை பார்த்தவர்களோ, யார் இந்த சாய் விஷ்ணு என அவரின் இன்ஸ்டா பக்கத்திற்கு சென்றால் அது பிரைவேட் என வந்தது. அடுத்த சில மணி நேரங்களில் சஸ்பென்ஸ் உடைந்து விட்டது.
அந்த சாய் விஷ்ணு வேறு யாரும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசரின் இளைய மகன் தான். சென்னை லயோலா கல்லூரியில் பி. காம் படித்திருக்கிறார். பட்டம் வாங்கியதும் அமெரிக்காவுக்கு சென்று திரைப்பட இயக்கம் குறித்து படித்துவிட்டு நாடு திரும்பினார் சாய் விஷ்ணு.ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான காலா, கபாலி ஆகிய படங்களில் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநராக வேலை செய்திருக்கிறார். சாய் விஷ்ணுவைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் மேகா ஆகாஷ்.
மேகா ஆகாஷ் சாய் விஷ்ணு திருமணம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் படு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திருமண பத்திரிக்கையை அரசியல் கட்சி தலைவர்களுக்கு கொடுக்க ஆரம்பித்து விட்டார் திருநாவுக்கரசர். தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ள திருநாவுக்கரசர், அனைவரும் வருக என்று அழைப்பு விடுத்துள்ளார். மேகா ஆகாஷ் சாய் விஷ்ணு திருமணத்திற்கு திரை உலக பிரபலங்களும், அரசியல் கட்சித்தலைவர்களும் அதிக அளவில் நேரில் வந்து வாழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?