அந்தமாதிரி பொண்ணுங்களே நமக்கு வேண்டாம்… அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்!

தமிழில் பேசுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி செல்வராகவன் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Sep 23, 2024 - 22:02
அந்தமாதிரி பொண்ணுங்களே நமக்கு வேண்டாம்… அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்!

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என பல கல்ட் கிளாசிக் திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் செல்வராகவன். இவர் இயக்கத்தை தாண்டி அண்மைக்காலமாக பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அவரது தம்பியும், பிரபல நடிகருமான தனுஷ் இயக்கத்தில் வெளியான ’ராயன்’திரைப்படம்.

இயக்கம், நடிப்பு என என்னத்தான் பிசியாக இருந்து வந்தாலும், சமூகவலைத்தளத்திலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் அவர், செல்வராகவன், அவ்வப்போது தத்துவங்கள் கூறுவதும் வழக்கம். 

சில நாட்களுக்கு முன்பு சென்னை அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவாற்றிய மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சமூகவலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு இருந்த செல்வராகவன், ‘’யாரோ ஒருவர் எதையோ உளறிக்கொண்டு நான் ஆன்மிக குரு என்று பேசினால் நீங்களும் கண்ணை மூடிக்கொண்டு கேட்பீர்களா? உண்மையான குருவை நீங்கள் தேடிப் போக தேவையில்லை. அவரே உங்களை தேடி வருவார். உங்களுடைய சந்திப்பு தானாக நடக்கும்” என்று அறிவுரை வழங்கி இருந்தார். 

இந்த நிலையில், தமிழில் பேசுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி செல்வராகவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், ”எனக்கு ஒரு வேண்டுகோள். அதை நான் கெஞ்சி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். முக்கியமாக தமிழ்நாட்டு மக்களுக்கு…. தமிழ் இனி மெல்ல சாகும் என பாரதியார் சொன்னார். அவரின் வார்த்தை உண்மையாக்கும் விதமாக தமிழ் இப்போது ஐசியூவில் வென்டிலேட்டரில் படுத்துக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் இங்கிலீஷ் தான்.  இங்கிலீஷ் தெரியாதவன் கூட, திணறித் திணறி இங்கிலீஷில் பேச முயற்சி செய்கிறான். தமிழில் பேசுவதை அவமானமாக, அருவருக்கத்தக்கதாக நினைக்கின்றனர். 

எனக்கு இங்கிலீஷில் பேசுவதன் அவசியம் புரிகிறது. ஏனெனில் இங்கிலீஷ் தெரியாம நான் பள்ளி, கல்லூரிகளில் மிகவும் அவமானப்பட்டுள்ளேன். கூனி குருகி நின்றுள்ளேன். இங்கிலீஷ் தெரியாமல் கடைசி பெஞ்ச்சில் வெட்க்கப்பட்டு கொண்டே இருப்பேன். படிப்பை முடித்தபிறகுதான் இங்கிலீஷ் படிக்க வேண்டும் என எனக்கு ஒரு வெறி வந்தது. ஆங்கில பத்திரிகைகளையும், ஆங்கில புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். அதன் அர்த்தத்தை கண்டுபிடிக்க டிக்ஷனரி வைத்துக் கொள்வேன்.

முதலில் கஷ்டமாக இருந்தாலும், போகப் போக இங்கிலீஷ் ஓரளவு கற்றுக் கொண்டேன். சினிமாவுக்கு வந்தவுடன் ஓரளவுக்கு இங்கிலீஷ் பேச ஆரம்பித்தேன். இப்பவும் நான் இங்கிலீஷில் முழுமையாக பேச மாட்டேன். அது குறித்து எனக்கு கவலையும் இல்லை. நான் தமிழன். எங்கு போனாலும் தமிழில் தான் பேசுவேன். ஆகவே எங்கு போனாலும் தமிழில் பேசுங்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். எங்கு சென்றாலும் தலைநிமிர்ந்து தமிழில் பேசுங்கள். நீங்கள் தமிழில் பேசுவதை அவமானமாக பார்த்தாலும் முறைத்துக் கொண்டு என்னவென்று கேளுங்கள்” என்று செல்வராகவன் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், “நீங்கள் தமிழில் பேசும்போது உங்களை ஒரு ஃபிகர் அவமானமாக பார்த்தால், முகத்தை சுழித்தால் அந்த மாதிரி ஒரு ஃபிகரே நமக்கு தேவையில்லை; தூக்கி கடாசிவிடுங்கள். தமிழ்நாட்டு பெண்ணே, தமிழ் பேசுற பெண்ணே எனக்கு போதும் என்று கூறுங்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் உலகத்தில் நீங்கள் எந்த நாட்டுக்கு சென்றாலும் எல்லோரும் அவர்களின் தாய்மொழியில் தான் பேசுவார்கள். அது மட்டும் தான் பேசுவார்கள். அங்கு யாரும் இங்கிலீசில் பேச முயற்சி செய்ய மாட்டார்கள். 

சின்ன தீவு நாடாக இருந்தாலும் கூட அவர்களின் தாய் மொழியை தான் பேசுவார்கள். நான் உண்மையை சொல்கிறேன். நீங்க வேண்டுமானால் இணையத்தில் தேடிக் கொள்ளுங்கள். வெளிநாட்டினர் அங்கு இருந்து இங்கே வந்து அழகாக தமிழ் கற்றுக் கொண்டு தமிழில் பேசுகிறார்கள். அதை பெருமையாகவும் நினைக்கிறார்கள். ஏனென்றால் உலகத்திலேயே பழமையான மொழி தமிழ் தான். இதை நான் கெஞ்சி கேட்பதாகவும் இல்லை வேண்டுகோள் விடுப்பதாகவும் நினைத்துக் கொள்ளுங்கள். காலம்காலமாக மனதில் புழுங்கிக் கிடந்த ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்’’ என்று செல்வராகவன் மனம் திறந்து பேசியுள்ளார். தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்து செல்வராகவன் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow