Director Surya Prakash: கோலிவுட்டில் அடுத்த அதிர்ச்சி... இயக்குநர் சூர்ய பிரகாஷ் மறைவு!

மாணிக்கம், மாயி, திவான் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சூர்ய பிரகாஷ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

May 27, 2024 - 10:49
May 27, 2024 - 13:02
Director Surya Prakash: கோலிவுட்டில் அடுத்த அதிர்ச்சி... இயக்குநர் சூர்ய பிரகாஷ் மறைவு!

சென்னை: மாணிக்கம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சூர்ய பிரகாஷ். 1996ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ராஜ்கிரண் ஹீரோவாகவும் வனிதா விஜயகுமார் நாயகியாகவும் நடித்திருந்தனர். மாணிக்கம் படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்ததால், அடுத்து பிரபு நடிப்பில் ஒரு படம் இயக்கினார் சூர்ய பிரகாஷ். பெண் ஒன்று கண்டேன் என்ற டைட்டிலில் உருவான இந்தப் படம் ரிலீஸாகவில்லை. அதன்பின்னர் சரத்குமார் கூட்டணியில் இணைந்த சூர்ய பிரகாஷ், மாயி படத்தை இயக்கினார். 2000ம் ஆண்டு ரிலீஸான இந்தப் படத்தில் சரத்குமார், மீனா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மாயி படத்தின் மூலம் இயக்குநர் சூர்ய பிரகாஷ் வெளிச்சத்துக்கு வந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் காமெடிகளும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன. முக்கியமாக “மாயி அண்ணன் வந்துருக்காக, மாப்பிள்ள மொக்கச் சாமி வந்துருக்காக... மற்றும் உற்றார் உறவினரெல்லாம் வந்துருக்காக... வாம்மா மின்னல்..” என்ற காமெடி இப்போதும் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கும் ரகம் எனலாம். மாயி வெற்றிப் பெற்றதால் மீண்டும் சரத்குமார்,  சூர்ய பிரகாஷ் கூட்டணி திவான் படத்தில் இணைந்தது. 2003ம் ஆண்டு ரிலீஸான திவான் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. 

அதேபோல், திவானுக்கு முன்னதாக சூர்ய பிரகாஷ் தெலுங்கில் இயக்கிய பரத சிம்ம ரெட்டி திரைப்படமும் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து தனது கேரியரில் பின்னடைவை சந்தித்த சூர்ய பிரகாஷ் புதிய படங்கள் ஏதும் இயக்கவில்லை. இந்நிலையில், இயக்குநர் சூர்ய பிரகாஷ் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார் இதனையறிந்த திரை பிரபலங்களும் ரசிகர்களும் சூர்ய பிரகாஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  அதேபோல், மாயி, திவான் படங்களில் ஹீரோவாக நடித்த சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், “எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். இந்நிலையில், உயிரிழந்த இயக்குநர் சூர்யபிரகாஷின் இறுதிச் சடங்கு, இன்று மாலை 6 மணிக்கு அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் வாடிப்பட்டி கிராமத்தில் நடைபெறுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow