கும்பகோணத்தில் தொடரும் சாதிய கொடுமை... ஊராட்சி தலைவரின் பெயர் அழிப்பு... பணிகள் செய்ய இடையூறா..?

May 10, 2024 - 11:05
May 10, 2024 - 12:30
கும்பகோணத்தில் தொடரும் சாதிய கொடுமை...  ஊராட்சி தலைவரின் பெயர் அழிப்பு... பணிகள் செய்ய இடையூறா..?

கும்பகோணம் அருகே பட்டியலின ஊராட்சி மன்ற பெண் தலைவரை செயல்பட விடாமல் திமுக மற்றும் பாமகவினர் தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அதிமுக தஞ்சை கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளரான மலர்க்கொடி சீனிவாசன், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடிச்சம்பாடி ஊராட்சி  மன்றத் தலைவராக உள்ளார். பட்டியலின சமுதாயத்தைத் சேர்ந்த இவர், பதவியேற்ற நாளில் இருந்து பாமகவினரும் திமுகவினரும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாமகவை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவபாலன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் ஆகியோர் மலர்க்கொடியை பணி செய்ய விடாமல் முடக்குவதாக கூறப்படுகிறது. 

கடந்தாண்டு அக்டோபர் மாதம் , கடிச்சம்பாடியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில், அதன் முகப்பில் ஊராட்சி மன்றத் தலைவர் மலர்க்கொடியின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அதனை  சிவபாலன் மற்றும் செல்வக்குமாரின் தூண்டுதலின் பேரில் சிலர் பெயிண்டால் அழித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சுவாமிமலை காவல் நிலையத்தில் மலர்க்கொடி புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

இதுகுறித்து பேசிய ஊராட்சி மன்றத் தலைவர் மலர்க்கொடி, பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், தன்னை செயல்பட விடாமல் தடுப்பதாக வேதனையுடன் கூறினார். மாவட்ட ஆட்சியர் முதல் அனைத்து துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் ஒரு பயனும் இல்லை என தெரிவித்த மலர்க்கொடி, இந்த விவகாரத்தில் தனக்கு நீதி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி மன்ற பெண் தலைவரை செயல்பட விடாமல் தீண்டாமை செயலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? என பொறுத்திருந்து பார்க்கலாம்…

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow