மின்சார உதடுகள்- அமேஸான்

மின்சார உதடுகள்" என்பது வாழ்க்கை, மரணம், காதல், ஆன்மிகம் மற்றும் மனித மனத்தின் ஆழங்களை ஆராயும் வித்தியாசமான நாவலாகத் தெரிகிறது. "செத்து செத்து விளையாடலாமா?" என்ற நகைச்சுவை வசனத்தை நினைவுபடுத்தும் வகையில், வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான எல்லைகளை கேள்விக்குள்ளாக்கும் சிந்தனைகளை இந்த நாவல் முன்வைக்கிறது. பல்வேறு தத்துவங்கள், ஆன்மிகக் கருத்துகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை இணைத்து, வாசகர்களை ஒரு புதிய சிந்தனைப் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. எழுத்தாளர் "ஒளித்துகள்" தனது தனித்துவமான நடைமுறையால், இறையன்பும் மனித உணர்வுகளும் கலந்த ஒரு ஆழமான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறார்.

மின்சார உதடுகள்- அமேஸான்
மாலைமதி

12.அமேஸான்

விமானத்தில் அமர்ந்திருந்தார்கள் இனியாவும் நிக்கோலஸும். அது டோக்கியோ நோக்கிச் சென்றுகொண்டு இருந்தது. இனியாவின் வலது காதில் ஒரு பேண்டேஜ் போடப்பட்டிருந்தது. நிக்கோலஸ் முகத்தில் வலது கண்ணுக்குக் கீழ் இடம் கன்றிப்போய் இருந்தது.
அவர் டிக்கெட்டில் இருந்த தேதி 27.8.25

"எனக்கென்னவோ இன்னும் நீங்கள் செய்வது தவறாகப் படுகிறது. குற்றம் நடந்தது அமெரிக்காவில்; விசாரணை நடத்துவது ஜப்பானில். அதுவும், ஏதோ ஒரு தீவில். மெய்ன்லேண்டில்கூட இல்லை. அந்தத் தீவு உலக வரைபடத்தில் பார்த்தால் ஒரு புள்ளி வைக்கக்கூட காணாது போல இருக்கிறது. இதில் என்னை வேறு உங்களோடு அனுப்பியிருக்கிறார்கள்,
அந்தம்மா தன்னோட பொண்ணு செத்துப் போச்சு அப்படீன்னு தெரிஞ்சும், ஜப்பான்ல ஊர் பேர் தெரியாத எடத்துல போய் உட்கார்ந்துட்டு இருக்கிறதா சொல்றாங்க! ஆனா, தன் பொண்ணோட ஃப்ரெண்ட் ரூமுக்குள்ள வாயைக் கட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்காங்க.

இப்படி ஒரு கேஸ் என் வரலாற்றில நான் பார்த்ததில்லைங்க. ஜப்பான்ல நூறு தீவுகள் இருக்குமோ என்னவோ... எங்கம்மா போறோம்?"
நிக்கோலஸ் புலம்பலில் ஆரம்பித்துக் கிட்டத்தட்ட அழுகை வரை போய்விட்டார்.
"மொத்தம் 14,125 தீவுகள். க்ரைம் கேஸுங்களோட ஒப்பிடாதீங்க. மேக்ஸ்வெல் சொன்னதைக் கேட்டீங்கல்ல... கிறிஸ் நிபாயர் என்கிற சயின்டிஸ்ட்கூட ஏ.ஐ ஃபீல்டில் பணி செய்கிறார். ஏ.ஐ என்பதே ஒவ்வொரு மெமரி பீஸா எடுத்து ஒட்டி உருவாக்குவதுதான். நம்மமனசு மிகப் பெரிய பிரௌசர். என் மனசும் ராதிகா மனசும் இணைஞ்சது. ஆனால், எப்படி அவளே என்னைத் தாக்கினாள் என்று தெரியலை. ஒரே வழி நாம ஒகினாவா போறதுதான்! அப்படித்தான் என் உள் மனசு சொல்லுது! அமெரிக்கா, ஜப்பான், எல்லாம் மனசுலதான இருக்கு?" என்றார் இனியா.

“ஏங்க, உங்க மனசுகள் இணைஞ்சுதா..? அப்படியானா நீங்க போங்க. நான் எதுக்கு? ரோட்ரிகஸ் சார் என்னை ஏன் போகச் சொன்னார்?"
இனியா செய்தால் சரியாக இருக்கும் என்று நம்பினாலும், குழப்பத்தால், சிரிப்பது போலக் காட்டிக்கொண்டார் நிக்கோலஸ்.
"அவரோட உள் மனசு அப்படிச் சொல்லியிருக்குங்க. ஒருவேளை, அவருக்கும் 'மின்சார உதடுகள்' குறிச்சு தெரிஞ்சிருக்கலாம்."
பாயின்ட்டைப் பிடித்தார், இனியா.
"நல்ல மனசுங்க..!”

"அதைவிட நல்ல உதடுங்க. அது என்னங்க மின்சார உதடு..? ரஜினிகாந்த் பாடல் ஒன்று கேட்டிருக்கிறேன் "மின்சாரக் கண்ணா!” உங்க ஊர்ல ஃபேமஸ் இல்லையா? ஆமா! நேத்து நடந்ததை எந்த வகையில சேர்ப்பீங்க?”
வேகமாக, நேற்று அடி வாங்கிய கடுப்பில் கொஞ்சம் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போலத் தோன்றினாலும், தன் சந்தேகங்களையும் உத்தேசங்களையும் ஒன்றாகக் கொட்டி திடீரென, 'ஜப்பானில் ராதிகா இருக்கிற இடத்திற்குப் போகலாம்' என்று இனியா அழைத்ததால், போலீஸ் கமிஷனர் ரோட்ரிக்ஸ் சார் உத்தரவோடு, அடிவாங்கிய கையோடு, வருத்த முகத்தோடும் வயிற்றோடும், அது நிறைய எரிச்சலோடும் கிளம்பியிருந்த நிக்கோலஸ், தொடர்ந்து புலம்பினார்...
"அப்படியே அசந்து போய்ட்டேன். அமேஸிங் ஃபைட் சீன். 'அமேஸான்' என்றாலே கிரேக்கப் புராணக் கதைகளின்படி மார்பகம் இல்லாத வீராந்தனைகள் என்றுதானேசொல்றாங்க. நீங்க ரெண்டு பேரும் அப்படி அடிச்சுக்கிட்டீங்க... இப்ப மறுபடி அவரைப் பார்க்கப் போறீங்க. இடையில் என்னை அப்பளமாக்காமல் இருந்தால் சரி! அமேஸான் நதிகூட அந்தப் பொண்ணுங்க பெயரில்தான் வெச்சிருப்பாங்க போல” என்றார் நிக்கோலஸ்.
நேற்றைக்கு நடந்ததை இனியா நினைத்துப் பார்க்கத் தொடங்கினார். விர்விர்... என்ற போயிங் விமானத்தின் சத்தத்தில், அவர் மனதில் நேற்று ஹாவர்டு பல்கலைக்கழகப் பெண்கள் தங்கும் விடுதியில் நடந்தது வரிசையாக வந்தது.

புரொபஸர் மேக்ஸ்வெல் மனசைப் பற்றி நேற்று சுயநினைவு, கான்ஷியஸ்னெஸ் என்றெல்லாம் கூறிய பிறகு, தொடர்ந்து இப்படிச் சொன்னார்... "நாம் யார் என்பது நமது மூளையில் உள்ள ஒரு நினைவுப் பதிவுதான். அந்தப் பதிவை மாற்றும்போது பர்ஸனாலிட்டி மாறுகிறது. மின்சார உதடுகள் மூலம் அப்படி ஒரு கான்ஷியஸ்னெஸை மாற்றி மூளையில் பதிய வைக்க முடியும். உதாரணமாக செல்போனை எடுத்துக்கொள்ளுங்கள்... அதில் ஒரு எண் உள்ள சிம் கார்டை மாட்டினால், அது ஒரு ஆளுடையதாகச் செயல்படும். அதே ஃபோனில் சிம்மை மாற்றுவதுபோலத்தான், கான்ஷியஸ்னெஸ்ஸை டோட்டலாக மாற்ற முடியும் என்று சில்வியா நம்பினாள். அதில் கெஞ்சம் நினைவுகளை மாற்றிவிட்டால்கூட வித்தியாசமான விளைவுகளை ஏற்படுத்த முடியும். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட நபரை நண்பர் லிஸ்ட்டில் இருந்து எடுத்து எதிரி ஸிஸ்ட்டில் போட்டுவிட்டால்..." என்றார் மேக்ஸ்வெல்.

இதைச் சொல்லிக்கொண்டு இருக்கும்போது மேக்ஸ்வெல் அந்த விநோதமான 'மின்சார உதடுகள்' மெஷின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார். இனியா அவருக்குப் பின்னால், வீட்டுக்குச் சற்று வெளியே நின்றிருந்தார்.
நிக்கோலஸ் அந்தப் புத்தக ஷெல்ஃபைத் தாண்டி அடுத்த ரூமை நோக்கிச் சென்றிருந்தார். அங்கே நாற்காலியில் கட்டிப் போடப்பட்டிருந்த பெண்ணைப் பார்த்தார். அவர்தான் ராதிகா மைக்கேல் என்பதைப் பிறகு இனியாவிடமிருந்து தெரிந்துகொண்டிருந்தார். அந்த இடத்தில் என்ன நடந்தது என்று நினைத்த இனியாவின் மைண்ட் ஃப்ளாஷ்பேக் 'இப்போது, 'அப்போது' என்று தொடர்கிறது.
அப்போதுதான்...

வீட்டுக்குள்ளிருந்து நிக்கோலஸின் சத்தம் கேட்டது. "இனியா, இனியா... உள்ளே வாங்க! இங்கே... இங்கே..." அவருடைய சத்தத்தின் திசை நோக்கி ஓடினார் இனியா.
மஹிமாவின் அறைக்கதவு திறந்திருக்க, உள்ளே நிக்கோலஸின் முதுகுதான் தெரிந்தது இனியாவிற்கு.
வேகமாக ஓடினார். நிக்கோலஸ் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒருவரது முகத்தில் இருந்த பிளாஸ்த்ரியை கழட்டிக்கொண்டு இருந்தார்.
அது ராதிகா. ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒரு சேர வந்தது.

ஜப்பானில் இருப்பதாக நினைத்துக்கொண்டு இருந்தவர் அமெரிக்காவில் இருந்தால்..! அவர் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன. இனியா பின்புறமாக வந்து அந்த கயிற்றை அவிழ்க்க முயன்றார்.
"இவர்தான் ராதிகா... சில்வியாவின் அம்மா!”
கட்டு தளர்ந்ததும், ராதிகா அப்படியே எழுந்திருக்க முயன்றார். நாற்காலி கூட உயர்ந்தது.
“ஹம்மா... ஐயோ..."
அலறல் ஒரு ஆண் குரலாக இருந்தது.
கயிற்றை அப்படி நage விட்டுட்டு முன்னால் பார்த்தால், நிக்கோலஸ் கால்களில் நாற்காலி தாக்கிக் கீழே உருண்டிருந்தார்.

தன் கைவிரல்களால் தானே மீதமிருந்த கயிற்றைச் சரசரவெனக் கழற்றிய ராதிகா, பிளாஸ்திரியைப் பிய்த்து எடுக்கக்கூட முயலாமல், முதல் குத்தை இனியாவின் முகத்தில் இறக்கினார்.
நட்பின் நவரசத்தில் இருந்தவர் இனியா. அடி வாங்கியதில் முகம் வலித்ததைவிட, மனசு அதிகமாக வலித்தது. அதனால் இனியா அப்படியே அசந்து போய்ப் பின்னால் நகர்ந்து உட்கார்ந்துவிட்டார். 'ஒருவேளை, ராதிகாவிற்குத் தன்னை அடையாளம் தெரியவில்லையோ? என்று நினைத்தவாறு, ஒரு சில விநாடிகள் அப்படியே அமர்ந்திருந்தார்.

'ஐயோ' என்ற நிக்கோலஸின் அடுத்த சத்தம் இனியாவை உசுப்பியது. கீழே உருண்டிருந்த நிக்கோலஸ், 'நாம ஹெல்ப் பண்ணத்தானே போனோம்...' என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போதே, அவருடைய வயிற்றின் மீது தனது ஷூ காலால் மிதித்து, நசுக்கி, எகிறி.. வாசலை நோக்கி ஓடினார் ராதிகா.
“தப் தப் தப் தப்"
இடையில் குனிந்து, நிக்கோலஸின் இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்துக்கொள்ள மறக்கவில்லை. நேராக கிச்சனில் போய் கொஞ்சம் எண்ணெய் விட்டு பிளாஸ்திரியைப் பிரித்து, வாசலை அடையவும், இனியா உள் அறை வாசலை வந்து சேரவும் சரியாக இருந்தது.
"ராதீஈஈஈஈஈ...” என்று மிகப்பலமாகச் சத்தமிட்டார் இனியா.
அடுத்த விநாடி, ராதிகாவின் வலது கை இடுப்பின் அருகே உள்ளே திரும்பி... துப்பாக்கிக் குண்டு ஒன்றை அனுப்பியது.
இனியாவின் ரிஃப்ளெக்ஸுகள் ஃபைட்டிங் மோடுக்குத் திரும்பிய மைக்ரோ விநாடி அவர் விலகியதால், அவரது வலது காதுப் பக்கம் ஒரு சிராய்ப்பைக் கொடுத்தது நிக்கோலஸின் அரசாங்க புல்லட்.

ராதிகா பார்க்கவில்லை, அல்லது, பார்க்கத் தயாராகவில்லை, அல்லது, பார்த்தும் பாசம் காட்டவில்லை என்கிற மூன்று ஆப்ஷன்களுமே இனியாவை முழுசாகக் கோபம் கொள்ளத் தூண்டினாலும், நாள்தோறும் அவர் செய்துவந்த மெடிட்டேஷன்..

எகார்ட் டோலின் ‘லைஃப் இஸ் எ டேஞ்சர்' பொன்மொழிகள் எல்லாம் தக்க சமயத்தில் நினைவுக்கு வந்தன. அவர் மனசில் இடி இடித்தது போல் இருந்தது.
"ஆமா.. அவ ஹனிமூனுக்குப் போறா. நீங்க ஆசையா கையக் காட்டி பைபை சொல்லிட்டு இருங்க' என்று நிக்கோலஸ் பின்னாலிருந்து இனியாவை அந்த அவசரத்தில் ஒரு மரியாதை கலந்த மென்மையோடு ஒதுக்கிவிட்டு, ராதிகாவைத் துரத்திச் சென்றார்.
இனியா சமாளித்துக்கொண்டு அவரும் துரத்தத் தொடங்கினார். மேக்ஸ்வெல் வாசலுக்கு வெளியே உள்ளே நடந்த துப்பாக்கிச் சூடு சத்தத்தால் குழம்பிப் போனவர், ராதிகா ஓடி வருவதைப் பார்த்ததும்...

"மேடம்... வாங்க! நீங்க எப்போ வந்தீங்க..? நான் சொன்னேன் நீங்க வருவீங்கன்னு. இனியா மேடம் நம்பவே இல்லை. ஜப்பான்ல...”
மேக்ஸ்வெல்லின் பேச்சு தடைப்பட்டது. ராதிகாவின் துப்பாக்கி மேக்ஸ்வெல் தலையில் இருந்தால் எப்படிப் பேச்சு வரும்?
முதல்முறையாக ராதிகா பேசினார். வாசலில் வந்த இனியா, நிக்கோலஸ் இருவரிடமும், “இங்க பாரு இனியா... உன்னைப் பற்றி எனக்குத் தெரியும். நிக்கோலஸ், இறந்து போனது என் பொண்ணே கிடையாது. அவளை நம்பி என்னைத் துரத்தறதை நிறுத்துங்க. இனியா 'கன்'னைக் கீழே போடு. நிக்கோலஸ், கைகளை மேலே தூக்கு."

"ராதி, உனக்கு என்னாச்சு..? ஏன் இப்படிச் செய்யற..? சில்வியா உயிரோடுதான் இருக்காள்ன்னா எனக்கும் சந்தோஷம்தான். நீ ஏன் என்கிட்ட கூட சொல்லாம இங்க வந்திருக்க? யார் உன்னைக் கட்டிப் போட்டாங்க? ஆர் யு ஓகே? அவரை ஒண்ணும் பண்ணிடாத!”
அவர் பேசப் பேசவே ராதிகா குறுக்கிட்டார்... “ஆமா, நீ பெரிய தியாகி! நீதானே மஹிமாவைக் கொன்னது? இப்போ... ரொம்பப் பேசாதே. என்னை யாரும் ஃபாலோ பண்ணக் கூடாது. அந்த காருக்குள்ள நானும் ஏறிப் போகப் போகிறோம். நீங்க வந்தா, மேக்ஸ்வெல்லின் டெட் பாடிதான் கிடைக்கும்.

என்னைப் பத்தித் தெரியுமில்ல... முன்னாடி சுடறதைவிட பின்னாடி என் துப்பாக்கி நல்லாவே குறிபார்க்கும். இனியா... உன் காதை வேணும்னுதான் விட்டு வெச்சேன், தொடர முயற்சி பண்ணினே... மூளை சிதறிடும்!”
ராதிகா மேக்ஸ்வெல்லை இழுத்துக்கொண்டு சென்று, அருகிலிருந்த காரில் ஏறினாள்.
 இருந்த இடத்தில் ஒரு துப்பாக்கிக் குண்டைச் செலுத்தினாள். கார் பயந்து, பணிந்து, 'நான் போகிறேன்' என்றது.
மேக்ஸ்வெல் அதுவரை தானுண்டு, தன் லேப் உண்டு என்று இருந்தவர். திருதிருவென விழித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.
அடுத்த ஐந்நூறு மீட்டர் தாண்டி, காரில் இருந்து உருட்டி விடப்பட்டார் மேக்ஸ்வெல். அவருக்கு சிராய்ப்புக் காயத்தோடு குழப்பமும் பரிசாக கிடைத்தது.
மூன்று பேரும் மருத்துவமனை போய் வைத்தியம் செய்துகொண்டு திரும்பி இருந்தார்கள்.

அடுத்த நாள் இனியாவிற்கு ஒகீமி ஐலேன்ட் போக வேண்டும் என்று தோன்றியது. காதில் போட்டிருந்த பிளாஸ்டரை வருடிவிட்டுக் கொண்டார் இனியா.
ஒருவழியாக டோக்கியோவில் இறங்கினார்கள். ஆல் நிப்பான் ஏர்லைன்ஸில் (ஏ.என்.ஏ) நாஹா தீவிற்குப் போகின்ற வரிசைப்பக்கம் போனபோது, இனியாவை நோக்கி “ஒஹாயோ!" என்றொரு குரல் கேட்டது.
இனியாவின் கண்களில் இருந்த சோர்வு, களைப்பு எல்லாம் போய்விட்டது.
"உங்கள் பயணம் தள்ளிப் போனதிற்காக வருந்துகிறோம். அடுத்த விமானத்தில் உங்களுக்குஅனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அந்தப் பணிப்பெண் கூறினாள்.
அது வேறு யாருமல்ல...
'சில்வியாவே'தான்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow