உதயசூரியனை மறந்த ஐ. லியோனி.. தேனியில் நடந்த குழப்பம்.. திகைத்துப் போன தங்கத்தமிழ் செல்வன்

தேனி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்த திண்டுக்கல் ஐ. லியோனி, உதயசூரியனுக்கு வாக்கு கேட்பதற்கு பதிலாக சின்னத்தையும் வேட்பாளரையும் மாற்றி கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியது.

Apr 2, 2024 - 17:27
உதயசூரியனை மறந்த ஐ. லியோனி.. தேனியில் நடந்த குழப்பம்.. திகைத்துப் போன தங்கத்தமிழ் செல்வன்

தேனி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்த திண்டுக்கல் ஐ. லியோனி, உதயசூரியனுக்கு வாக்கு கேட்பதற்கு பதிலாக சின்னத்தையும் வேட்பாளரையும் மாற்றி கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியது. 

தேனி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் தங்க தமிழ்ச்செல்வன். அவரை ஆதரித்து திமுக தலைமை கழக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி சோழவந்தான் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், இந்த நேரத்தில் தாய்மார்கள் அதிகளவு கூடி இருக்கிறீர்கள் எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்றால் டிவியில் இரண்டு மணி நேரம் பேசுவார் இவர் என்னைக்கு பேசி முடிக்க நான் என்னைக்கு வீட்டுக்கு போக இப்படி எல்லாம் என்னை பேசுவார்கள் என்று நான் நினைத்தேன் ஆனால் எல்லோருடைய முகத்திலும் சந்தோஷத்தையும் நான் பார்க்கிறேன். 

நான் கூட்டத்திற்கு வரும்போது ஒரு மூதாட்டி என்னை பார்த்து டிவில பார்க்கிறதை விட நேர்ல பார்க்க அழகா இருக்கேன்னு சொன்னாங்க. சோழவந்தான் மக்கள் மனசில் எதுவும் வைத்துக்கொள்ளாமல் வஞ்சகம் இல்லாமல் பேசுவார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. 

டிவில மேக்கப் போட்டு வேற மாதிரி காட்டுவாங்க ஆனா நான் இங்க இருக்கும்போது அழகா இருக்க காரணம் நான் அணிந்திருக்கிற திமுக துண்டு என்று கூறிய லியோனி, அவரே குழப்பத்தில் மாற்றி பேச ஆரம்பித்தார். நான் ஆதரித்து பேசக்கூடிய வேட்பாளர் அருமை தோழர் அறிவாள், சுத்தியல், நட்சத்திர சின்னத்தில் போட்டியிடுகின்ற என்று கூறினார். 

வேட்பாளரையும் சின்னத்தையும் மாற்றி கூறியதால் கீழே இருந்த தொண்டர்களும் பொதுமக்களும் திமுகவைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் என்றும் உதயசூரியன் சின்னம் என்றும் கோஷம் எழுப்பினர்."  சமாளித்த திண்டுக்கல் லியோனி, இப்போதுதான் மதுரையில் பிரச்சாரம் முடித்துவிட்டு வந்தேன் என்று மண்டையை சொரிந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேரிலேயே தங்கம் தமிழ் செல்வன் என்று உள்ளது. தங்கம் என்றால் எல்லோரும் போட்டு அழகு பார்க்கின்ற பொருள் தமிழ் என்றால் நாம் பேசுகின்ற மொழி செல்வம் என்பது நமக்கு கிடைக்கின்ற மிகப் பெரிய எல்லோரும் நேசிக்கின்ற ஒன்று. இது மூன்றும் ஒன்று சேர்ந்த ஒரு பெயர் என்றால் எனது தம்பி தங்க தமிழ்ச்செல்வன் தான்.

 தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறார் அதற்கு அமைச்சர் மூர்த்தி சபதமிட்டு முதல்வரிடம் வெற்றி பெற்று காட்டுவேன் என சபதம் போட்ட ஒரே முதல் நபர் தமிழகத்திலேயே அமைச்சர் மூர்த்தி தான். 

இன்றைக்கு பெண்கள் முகத்தில் சந்தோசம் இருக்கிறது என்றால் மாதம் மாதம் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வருகிறது. ஆண்கள் இன்றைக்கு குடும்பத் தலைவர்கள் நாங்கள் தான் ஆனால் வங்கிக் கணக்கில் பணம் மட்டும் பெண்களுக்கா என்று கேட்கிறார்கள். எங்களுக்கு கொடுத்திருந்தால் நாங்கள் எப்படி செலவழித்து இருப்போம் என்று தெரியுமா.? 

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் பணத்தில் குடும்பத் தலைவர்களுக்கு கொடுத்தால் ஆயிரம் ரூபாயில் 250 ரூபாய் வீட்டுக்கு கொடுத்துவிட்டு 250 ரூபாய் ஒரு ஆப் ஊறுகாய் மட்டை காராபூந்தி. என குடிகாரர்கள் போல் நடித்து காண்பித்து விட்டு எல்லா ஆண்கள் அப்படி அல்ல என்றார். இதே மகளிர் கொடுத்தால் நகை சீட்டு வங்கிக் கணக்கில் இருப்புத்தொகை என பெண்கள் சிந்திப்பார்கள் என்று தெரிவித்தார். 

அப்போது சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோவில் மணி ஒலித்தது. எங்க தங்க தமிழ்ச்செல்வன் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார் என்பதற்கு சாட்சி இந்த கோவில் மணி தான் என்றார். கடவுள் இல்லை என்று திமுகவினர் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் கோவில் மணி ஒலித்ததும் மக்களிடம் கோவில் மணியை சாட்சி என்று கூறினார் ஐ. லியோனி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow