3-ம் கட்ட தேர்தல்;11 மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது...

May 7, 2024 - 07:32
May 8, 2024 - 11:04
3-ம் கட்ட தேர்தல்;11 மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது...

11 மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் ஏப்ரல் 19-ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் ஏப்ரல் 26-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இந்த நிலையில், மூன்றாவது கட்டமாக 11 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளில் இன்று (மே 7) மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அஸ்ஸாமில் உள்ள 14 தொகுதிகளில் ஏற்கனவே 10 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் மீதமுள்ள 4 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. பீகாரில் 5 தொகுதிகளிலும், சத்தீஸ்கரில் 7 தொகுதிகளிலும் கோவாவில் உள்ள 2 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

குஜராத்தில் உள்ள சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் மீதமுள்ள 25 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 14 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 9 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 10 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகள், குஜராத் அருகே உள்ள தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ ஒன்றிய பிரதேசத்தில் உள்ள 2 தொகுதிகள் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அரசியல் கட்சியினர் கோரிக்கையை ஏற்று ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்தநாக்-ரஜோரி தொகுதியில் இன்று நடைபெற இருந்த வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல மத்திய பிரதேசம் பெதுல் தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் இறந்ததால் தள்ளிவைக்கப்பட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர். 

வெயில் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் பிற்பகலுக்கு மேல் அதிகளவு வாக்காளர்கள் வாக்களிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow