இவிஎம் ஸ்ட்ராங் ரூமில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள்.. ஹைகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி..
தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் அமைக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நீலகிரியில் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் கண்காணிப்பு கேமராக்கள் திடீரென செயலிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, ஈரோடு, விழுப்புரம் தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களும் சிறிது நேரத்துக்கு செயலிழந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கோடை வெப்பம் காரணமாக கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்ததாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கண்காணிப்பு கேமராக்கள் அதிக வெப்பத்தை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். எனவே, கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்தது குறித்து உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு, உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், “கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தது குறித்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. கூடுதல் கேமராக்களை நிறுவுமாறும் எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது குறித்து தேர்தலில் போட்டியிட்டவர்கள் எவரும் வழக்கு தொடராத நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
What's Your Reaction?