40 தொகுதியிலும் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடுகிறார் என மனதில் கொள்ளுங்கள்..! நாடும் நமதே 40ம் நமதே - முதலமைச்சர் அறிக்கை..!
தேர்தலுக்கான குறிக்கோள் என்ன என்பதை எடுத்துக்கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
திமுக - கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு நேற்று (மார்ச் 9) இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து கட்சி தொண்டர்கள் தேர்தலுக்காக தீவிரமாக களமிறங்கி பணியாற்ற வேண்டும் என்றும், தற்போதைய தேர்தலுக்கான குறிக்கோள் என்ன என்பதை எடுத்துக்கூறியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மக்களாட்சி மாண்பைக் காக்கும் மகத்தான புதிய அரசை ஆட்சியில் அமர்த்துவதற்காக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்ட முதலமைச்சர், சமூகநீதி, சமத்துவம் - சகோதரத்துவம் - மாநில உரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டாட்சி அரசாக அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் “இந்தியா” கூட்டணி அமைக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு சிறப்பாக முடிவு பெற்றதாக கூறியிருக்கும் முதலமைச்சர், கூட்டணியில் உள்ள அனைவரும் ஒற்றை சிந்தனைகளுடன் தொகுதிகளை பகிர்ந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு, கழக உடன்பிறப்புகள் அயராது பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்ட முதலமைச்சர், 40 தொகுதியிலும் நானே போட்டியிடுகிறேன் என்பதை மனதில் வைத்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.
What's Your Reaction?