ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்- அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை (டிச.14) சுமார் 10.12 மணியளவில் அவர் காலமானார்.
சென்னையில் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை கடந்த மாதம் மோசமடைந்தது. மூச்சு திணறல் காரணமாக சென்னை அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த மாத இறுதியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று, அவரது உடல்நலன் குறித்து விசாரித்தனர். தொடர் சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நலனில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாக இன்று காலை தகவல் வெளியானது. இதையடுத்து அவர் விரைந்து குணமடைந்து மீண்டும் இயல்பு வாழ்கைக்கு திரும்ப வேண்டும் என, காங்கிரஸ் கட்சியினர் விருப்பம் தெரிவித்து வந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை (டிச.14) சுமார் 10.12 மணியளவில் அவர் காலமானார். அவரது மறைவு காங்கிரஸ் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 1948ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி ஈரோட்டில் பிறந்தவர். சென்னை மாநில கல்லூரியில் பி. ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றார். இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர களப்பணியாற்றினார். படிப்படியாக உயர்ந்து இரண்டு முறை காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை வகித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சராகவும் பதவியேற்றார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன், தந்தை பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும் அவர் மகன் ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் மகனும் ஆவார். பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழக அரசியலில் தீவிரமாக களமாடினார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் ஆக்டிவ் அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த இளங்கோவன் அவரது மகன் திருமகன் ஈவேரா மறைவை அடுத்து, ஈரோடு கிழக்குத் தொகுதியில் நின்று எம்.எல்.ஏ.வாக மீண்டும் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?