மகளை கடத்தியதாக புகார்… நடவடிக்கை எடுக்காத போலீஸ்… தீக்குளிக்க முயன்ற பெற்றோர்…

மாணவியை கடத்திச் சென்றவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு

Mar 24, 2024 - 07:26
மகளை கடத்தியதாக புகார்… நடவடிக்கை எடுக்காத போலீஸ்… தீக்குளிக்க முயன்ற பெற்றோர்…

வாணியம்பாடி அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்றதாக அளித்த புகார் குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம் முன்பு பெற்றோர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது 17 வயதான மகள், ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்தார். இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த சபரி என்பவரும் மாணவியும் சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி, இரண்டு தேர்வுகளை எழுதாமல் கடந்த 18-ம் தேதி சபரியுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. மகளைக் காணாததால் பதற்றமடைந்த பெற்றோர், அம்பலூர் காவல் நிலையத்தில் மகளைக் கடத்தித் சென்றதாக புகார் அளித்தனர். ஆனால், புகார் குறித்து 5 நாட்களாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து நேற்று காவல் நிலையம் சென்று மாணவியை கண்டுபிடித்தீர்களா? என கேட்ட பெற்றோரை, உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி தரக்குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், மாணவியை கடத்திச் சென்றவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் காவல்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவியின் தாயார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த போது, தந்தை பழனி திடீரென தன்னிடம் இருந்த பெட்ரோலை இருவர் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை உறவினர்கள் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து கடத்திச் செல்லப்பட்ட மகளைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் எனவும் தரக் குறைவாக பேசிய காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவியின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow