”நான் அப்படி சொல்லவே இல்லைங்க..அவர் யாருனே தெரியாது” - சிவசங்கர் விளக்கம்..!
போக்குவரத்துறையில் வேலை வாங்கி தருவதாக தான் கூறவில்லை என்றும் சம்பந்தபட்ட இளஞ்செழியன் யார் என்றே தெரியாது என்றும் பண மோசடி வழக்கில் இன்று ஆஜரான போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பணியாற்றியவர் தான் சிவசங்கர். இவர் மீது எஸ்.எஸ்.ஐ.சீனிவாசன் என்பவர் தன் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 23 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், அவர்கள் கேட்ட 23 லட்சத்தை தர ஒப்புக் கொண்டு சிவசங்கரின் நெருங்கிய நண்பனரான இளஞ்செழியனின் வங்கிக் கணக்கில் அந்த தொகையை சீனிவாசன் செலுத்தியதாகவும், சென்னை தலைமை செயலகத்தில் அப்போது அமைச்சராக இருந்த சிவசங்கரை நேரில் சந்திக்க இளஞ்செழியன் ஏற்பாடு செய்தததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த சந்திப்பில், தன் மகனுக்கு போக்குவரத்து துறையில் வேலை உறுதி என்றும் அதற்கான பணி நியமன ஆணை உங்களுக்கு விரைவில் கிடைக்கும் என்றும் சீனிவாசனுக்கு முன்னாள் அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரையும் தன்னுடைய மகனுக்கு வேலை எதுவும் வழங்கப்படவில்லை என்றும், இது குறித்து அவரிடம் கேட்ட போது சரியான பதில் வரவில்லை என்றும், மேலும் பணத்தை பெற்றுக்கொண்ட பிறகு இதுவரையும் வேலை வழங்காமல் இளஞ்செழியனும் அமைச்சர் சிவசங்கரும் சேர்ந்து என்னை ஏமாற்றி விட்டனர் என்று அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் சீனிவாசன் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சீனிவாசனின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் இளஞ்செழியன் மீதும் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் சிவசங்கருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சிவசங்கரை ஜூலை 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு உள்ள விசாரணைக்கு ஆஜராகும் படி மத்திய குற்ற பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பி இருந்தனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள இளஞ்செழியன் வீட்டிற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.
இந்நிலையில், மத்திய குற்றபிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியிருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் 23 லட்சம் பண மோசடி வழக்கு தொடர்பாக இன்று காலை 10 மணிக்கு வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் ஆஜரானார். விசாரணையின் போது உதவி கமிஷனர் சரண்யா மற்றும் இன்ஸ்பெக்டர் ஞானசித்ரா ஆகியோர், ”போக்குவரத்து துறையில் உதவி பொறியாளர் பணிக்கு ரூ 23 லட்சம் பெற்றது உண்மையா? பாதிக்கப்பட்ட நபர் உங்களை நேரில் சந்தித்தது உண்மையா? பணமோசடிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு” என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
இந்த கேள்விகளுக்கெல்லாம், கைதான இளஞ்செழியனுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், அவர் தனது உதவியாளர் என்பது பொய் என்றும், அவர் தனது மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் தனதுப் பெயரை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுப்பட்டுள்ளார் என்றும் சிவசங்கர் தெரிவித்தார்.
மேலும் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகத் தான் யாரிடமும் பணம் வழங்கவில்லை. வேண்டுமென்றால் இளஞ்செழியனுடன் தான் தொலைப்பேசியில் பேசியதாகக் கூறப்படும் ஆடியோவில் உள்ள குரலை தனது குரலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் குரல் பரிசோதனைக்கும் நான் தயாராக இருக்கேன் என்றும் பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் போலீஸார் அழைத்ததன் பேரில் ஆஜாரானதாகவும் தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராவதாகவும் கூறியுள்ளார்.
What's Your Reaction?