தவெகவில் இணைந்தாலும் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை..? – அமைச்சர் திட்டவட்டம்…!
தவெகவில் இணைந்தாலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதுள்ள குட்கா வழக்கு எவ்வித சமரசமுமின்றி விசாரிக்கப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.க்களை பணம் கொடுத்து திமுக தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார்.
முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் செந்தில்பாலாஜி போன்றவர்கள் தவெக சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்டு ரூ.10 கோடி முதல் ரூ.50 கோடி வரை வழங்குவதாக பேரம் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் செய்தியாளர் சந்தித்து பேசினார். அப்போது, கடந்த 40 நாட்களாக இந்த முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், புகாரின் அடிப்படையில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அதாவது, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் திமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என சில எம்.எல்.ஏ.க்களிடம் திமுக தரப்பில் இருந்து குறிப்பாக செந்தில்பாலாஜி தரப்பில் பேரம் பேசப்பட்டதாகவும், இதில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நபர்கள் தொடர்புடையவர்கள் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்றும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவதாகவும் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார்.
வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் கட்சியில் இணைந்தாலும், அவர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைகள் வழக்கம்போல தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ”ஸ்டாலின் அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் அல்லது நீங்கள் முன்பாக முடிவு செய்தது போல் திமுக அதிமுக இணைந்து பாரதிய ஜனதா கட்சியிடம் சேர்ந்து அரசியல் ஆதாயத்தை தேடி சொல்லுங்கள். இன்னைக்காவது ஸ்டாலின் தலைமையிலான அரசு என்று சொல்லி இருக்கிறாரா திராவிட மாடல் அரசு என்றுதான் சொல்லி இருக்கின்றார் ஏனென்றால் அவருக்கே அந்த தைரியம் கடைசி வரை வரவில்லை. இப்போதும் நாங்கள் சொல்கின்றோம் திமுகவுடைய அத்தியாயம் இத்துடன் முடிவடைந்துவிட்டது” என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, சி விஜயபாஸ்கர் குட்கா வழக்கு மற்றும் வரக்கூடியவர்கள் பேரில் வழக்குகள் இருக்கிறது அதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு “நாங்கள் யாரையும் ஆதரிக்கவில்லை விஜயபாஸ்கர் மட்டும் நாளைக் கட்சியில் இணைவதில்லை அவருடன் 40 மாவட்ட செயலாளர் எங்கள் கட்சியில் இணைய உள்ளார்கள். ஒருவர் மீது என்ன வழக்கு இருக்கிறது என்று தெரியாது அது நிச்சயமாக அவர்கள் மீது இருக்கக்கூடிய வழக்கு நடவடிக்கை தொடரும்” என்று அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
What's Your Reaction?