காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள்... ஆளுநர் ஆர்.என்.ரவி வருத்தம்!

காந்தி மண்டபத்தில் தூய்மை செய்யும் பணியின்போது மது பாட்டில்களை கண்டது தனக்கு வருத்தமளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Oct 1, 2024 - 09:48
காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள்... ஆளுநர் ஆர்.என்.ரவி வருத்தம்!

சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”மகாத்மா காந்தி  சுதந்திர போராட்ட தியாகி மட்டுமல்ல, அவர் தூய்மையை வலியுறுத்தினார். தூய்மைப்படுத்துதல் என்பது கடவுளுக்கு சேவை செய்ததற்கு சமம்.  தூய்மைப்படுத்துதலை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும். நமது நாட்டில் பொது இடங்களில் குப்பையை வீசுகிறார்கள். இது சரியல்ல. நல்ல  மாற்றத்திற்கான சமூகத்திற்கான அறிகுறி அல்ல இது” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “பல பல்கலைக்கழகங்களில் தூய்மை பணியை மாதத்தில் ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளேன். பல இடங்களில் நானும் சுத்தப்படுத்தும் பணியில் கலந்து கொண்டுள்ளேன்.

தூய்மைப்படுத்துவது என்பது ஒரு நாள் பணி அல்ல.  நாம் தினந்தோறும், பொது இடங்களில் குப்பை போடக்கூடாது, பொது இடங்கள் அனைவருக்கும் பொதுவானது. காந்தி மண்டபத்தில் சுத்தம் செய்யும் பணியில் சில பாட்டில்களை எடுத்தேன், அதில் மது பாட்டில்களையும் கண்டேன், இது காந்தியுடைய கொள்கைகளுக்கு எதிரானது, எனக்கு வருத்தம் அளிக்கிறது” என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow