தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை.. 7 நாட்களுக்கு கவனம்.. காரணம் கூறும் வானிலை மைய தலைவர்

முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுகிறது. தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம் என இந்திய வானிலை மையத்தின் தலைவர் மொஹபத்ரா கூறியுள்ளார்.

Apr 25, 2024 - 15:44
தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை.. 7 நாட்களுக்கு கவனம்.. காரணம் கூறும் வானிலை மைய தலைவர்

தமிழ்நாட்டில் பல ஊர்களில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அனல் காற்று வீசுவதால் மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் ஓரிரு  இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறையில் 4 செமீ,  சிற்றாறு-I 2 செமீ, பாலமோர், பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, சுருளக்கோடு, சோலையார்,  வால்பாறை PTO தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருந்தது.   கடலோரப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை  பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் வெப்ப அலை வீசியது. அதிகபட்ச வெப்பநிலை 9  இடங்களில்   40-42° செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை  ஈரோட்டில் 42.0° செல்சியஸ், வேலூரில் 41.6° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.4° செல்சியஸ், சேலத்தில் 41.1° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.0° செல்சியஸ், தர்மபுரியில்    40.7° செல்சியஸ், திருத்தணியில் 40.6° செல்சியஸ், நாமக்கல் மற்றும் திருச்சியில் 40.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இதர தமிழக உள் மாவட்டங்களில் 38° – 40° செல்சியஸ்    பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34° – 37° செல்சியஸ்    மற்றும் மலைப் பகுதிகளில் 21° –30°  செல்சியஸ்  பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.7° செல்சியஸ்  மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.6° செல்சியஸ்   பதிவாகியுள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. 25.04.2024 முதல் 28.04.2024 வரை: தென் தமிழக கன்னியாகுமாரி, திருநெல்வேலி மாவட்டங்கள், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

29.04.2024 முதல் 01.05.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 25.04.2024 முதல் 29.04.2024 வரை அதிகபட்ச   வெப்பநிலை  தமிழக  மாவட்டங்களின்  ஓரிரு இடங்களில்  இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 
அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 38°–41° செல்சியஸ். 

25.04.2024 முதல் 29.04.2024 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும்  இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை  ஏதுமில்லை.

இதனிடையே முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவதாக  இந்திய வானிலை மையத்தின் தலைவர் மொஹபத்ரா கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் தற்போதைய நிலைக்கு "Hot and humidity weather" என பெயரிட்டுள்ளோம். முன்பெல்லாம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருந்தால் அசவுகரியம் இருக்காது. தற்போது 35 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை
தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு வெப்பநிலை உணரப்பட காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதே காரணம் எனவும்  இந்திய வானிலை மையத்தின் தலைவர் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow